இலங்கை தோற்றாலும் ஆசிய கிண்ணத்தில் சாதனை படைத்த மாலிங்க

1240

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்முறை மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மாலிங்க, ஆசிய கிண்ண வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் வரிசையில், முத்தையா முரளிதரனை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள்…

ஆசிய கிண்ணக் கனவுடன் சென்ற இலங்கை அணி முதல் சுற்றில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில் நாடு திரும்பவுள்ளது.

ஐந்துமுறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை அணி, இம்முறை தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாக பதிவாகியுள்ளது. அத்துடன், வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளாமல் இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய முதற்தடவையும் இதுவாகும்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடர் நிறைவில் சற்று மேலெழுந்திருந்த இலங்கை அணி, ஆசிய கிண்ணத்தில் திடீரென வீழ்ச்சியடைந்தமை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளது. எனினும், அணிக்கு ஒரே ஒரு நம்பிக்கையாக இருந்த லசித் மாலிங்கவின் வருகை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இலங்கையை வீழ்த்திய புத்தம்புது எதிரணி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்..

சுமார் ஒருவருட காலத்துக்கு பின்னர் தேசிய அணியில் இணைந்த லசித் மாலிங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன், முதல் பந்து ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது வருகையை சர்வதேச கிரிக்கெட்டுக்கு பரை சாற்றினார். மேலும், குறித்த போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்ற மாலிங்க வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், களத்தடுப்பில் தவறுகள் விடப்பட்டிருந்தன.

இதேபோன்று, இரண்டாவது போட்டியிலும் மாலிங்க சிறப்பாக பந்து வீசியிருந்தாலும், மீண்டும் களத்தடுப்பில் விடப்பட்ட தவறுகளால் அவரால் ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆசிய கிண்ணத்தில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடித்திருந்தார். இதன்படி, 28 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலிருந்த மாலிங்க தற்போது 33 விக்கெட்டுகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

லசித் மாலிங்கவுக்கு நல்வரவு

ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் டுபாயில்…

எவ்வாறாயினும் ஆசிய கிண்ணத்தின் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், மாலிங்க இறுதியாக T20 தொடராக நடத்தப்பட்ட ஆசிய கிண்ணத்திலும் சேர்த்து 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்படி மாலிங்க 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ணத் தொடர்களில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் (ODI/T20)

  • லசித் மாலிங்க – 33 விக்கெட்டுகள் (15 இன்னிங்ஸ்கள்)
  • முத்தையா முரளிதரன் – 30 விக்கெட்டுகள் (24 இன்னிங்ஸ்கள்)
  • அஜந்த மெண்டிஸ் – 26 விக்கெட்டுகள் (8 இன்னிங்ஸ்கள்)
  • சயீட் அஜ்மல் – 25 விக்கெட்டுகள் (12 இன்னிங்ஸ்கள்)
  • சமிந்த வாஸ் – 23 விக்கெட்டுகள் (19 இன்னிங்ஸ்கள்)

ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் (ODI)

  • முத்தையா முரளிதரன் – 30 விக்கெட்டுகள் (24 இன்னிங்ஸ்கள்)
  • லசித் மாலிங்க – 29 விக்கெட்டுகள் (14 இன்னிங்ஸ்கள்)
  • அஜந்த மெண்டிஸ் – 26 விக்கெட்டுகள் (8 இன்னிங்ஸ்கள்)
  • சயீட் அஜ்மல் – 25 விக்கெட்டுகள் (12 இன்னிங்ஸ்கள்)
  • சமிந்த வாஸ் – 23 விக்கெட்டுகள் (19 இன்னிங்ஸ்கள்)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<