இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணி 2014ம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது, அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்பட்டிருந்தார். இவர், கடந்த ஆண்டு T20 லீக் தொடர்களில் விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
இங்கிலாந்து அணியுடன் இரண்டு மேலதிக T20 போட்டிகளில் ஆடவுள்ள இந்திய அணி
எனினும், T20I போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள T20I உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் மாலிங்க இடம்பெறவில்லை. எனவே, லசித் மாலிங்க சர்வதேச T20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறவித்துள்ளார்.
தன்னுடைய ஓய்வு அறிவிப்பை லசித் மாலிங்க, அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“நான் 17 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் மூலம் பெற்ற அறிவும் அனுபவமும் இனி கிரிக்கெட் மைதானத்தில் தேவையில்லை. இன்றைய தினம் T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்துள்ளேன்.
கிரிக்கெட்டில் முன்னேற கடுமையாக உழைக்கும் எமது புதிய வீரர்களுடனும், கிரிக்கெட்டை நேசிக்கும் உங்கள் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன்.
கடந்த 17 ஆண்டுகளில் நான் பெற்ற அனுபவம் இனி மைதானத்துக்கு தேவைப்படாது. எனவே, அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறுகிறேன். ஆனால் விளையாட்டின் உணர்வை மேம்படுத்த முனையும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன். அத்துடன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.
தேசிய அணிக்காக 84 T20I போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க, 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக T20I போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார்.
அதேநேரம், 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவரின் கிரிக்கெட் வாழ்நாளில் அதிசிறந்த விடயமாக 2014ம் ஆண்டு T20I உலகக்கிண்ணம் அமைந்திருந்தது. குறித்த ஆண்டு நடைபெற்ற T20I உலகக்கிண்ணத்தொடரில், இவரின் தலைமையின் கீழ் விளையாடிய இலங்கை அணி, இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<