இலங்கை கிரிக்கெட் சபையினால் முதன்முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் நிரல்படுத்தல் (Player Draft) எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, ஆறு அணிகள் பங்கேற்கும் அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் தொடரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பலர் இணையவுள்ளனர்.
இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு அதிகபட்சமாக 17 வீரர்களையும், குறைந்தபட்சம் 15 வீரர்களையும் தேர்வு செய்யலாம்.
வீரர்கள் தங்களைப் பதிவு செய்வதற்கான கடைசித் திகதி நவம்பர் முதலாம் திகதியாகும். அதேபோல, நவம்பர் 5 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் ஆறு வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இம்முறை போட்டித் தொடருக்காக ஒரு ஐகொன் வீரர், ஒரு பிளாட்டினம் வீரர், A பிரிவில் பிரிவில் இலங்கை மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தலா ஒவ்வொரு வீரர், B பிரிவில் இலங்கை மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தலா ஒவ்வொரு வீரர் என ஆறு பிரிவுகளின் கீழ் வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம்.
- லங்கா T10 தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
- லங்கா T10 லீக் தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்
ஏனைய வீரர்களைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். 11 சுற்றுகளைக் கொண்ட வீரர்கள் நிரல்படுத்தலின் முதல் இரண்டு சுற்றுகளில் இலங்கை வீரர் ஒருவரையும், வெளிநாட்டு வீரர் ஒருவரையும் A பிரிவின் கீழ் அணிகளுக்கு வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒரு வீரரின் ஆரம்ப ஏல விலை 35,000 அமெரிக்க டொலர்களாகும். (இலங்கை பணப்பெறுமதியில் சுமார் 102 இலட்சம் ரூபா)
அதேபோன்று மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் B பிரிவின் கீழ் ஒரு இலங்கை மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரையும் அணி உரிமையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இப்பிரிவில் ஒரு வீரரின் ஆரம்ப ஏல விலை 20,000 அமெரிக்க டொலர்களாகும். (இலங்கை பணப்பெறுமதியில் சுமார் 58 இலட்சம் ரூபா)
5 முதல் 7 வரையான சுற்றுகளில் இரண்டு இலங்கை வீரர்களும், ஒரு வெளிநாட்டு வீரரும் தேர்வு செய்யப்படுவர். இது C பிரிவின் கீழ் உள்ளது. அந்த சுற்றுகளில் வாங்கப்பட்ட ஒரு வீரரின் ஆரம்ப ஏல விலை இலங்கை பணப்பெறுமதியில் 29 இலட்சம் ரூபாவாகும். (10,000 அமெரிக்க டொலர்).
8ஆவது சுற்று வளர்ந்து வரும் இலங்கை வீரரை தேர்வு செய்வதற்கு உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இப்பிரிவில் இடம்பெறும் ஒரு வீரரின் ஆரம்ப ஏல விலை 2,500 அமெரிக்க டொலர்களாகும். அதேபோல, 9ஆவது சுற்றில் ஜிம்பாப்வே அல்லது மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து வளர்ந்து வரும் வீரர் ஒருவரை 2,500 அமெரிக்க டொலர்களுக்கு அணி உரிமையாளர்களால்; ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<