லங்கா T10 சுப்பர் லீக் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா டைடன்ஸ் அணியினை ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் வீரர்கள் 26 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக்கின் சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றனர்.
லங்கா T10 சுப்பர் லீக்கில் தோல்வியுறாத ஜப்னா டைடன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிகள் இடையிலான இறுதிப் போட்டியானது நேற்று (19) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
>>லங்கா T10 சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜப்னா, ஹம்பாந்தோட்டை அணிகள்<<
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா வீரர்கள் முதலில் பந்துவீசும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றனர். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹம்பாந்தோட்டை அணியானது 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.
ஹம்பாந்தோட்டை அணியின் துடுப்பாட்டம் சார்பில் மொஹமட் சஹ்ஷாத் மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் தலா 26 ஓட்டங்கள் வீதம் பதிவு செய்தனர். ஜப்னா டைடன்ஸ் பந்துவீச்சில் ட்ரவீன் மெதிவ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 134 ஓட்டங்களை அடைய ஆடிய ஜப்னா வீரர்கள் 10 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றனர். ஜப்னா அணியின் துடுப்பாட்டம் சார்பில் டொம் அபேல் அதிரடி அரைச்சதம் விளாசி 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்ற போதும் அது வீணானது.
ஹம்பாந்தோட்டை அணியின் பந்துவீச்சில் ரிச்சர்ட் கீளிசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், தசுன் ஷானக்க வெறும் 04 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
போட்டி மற்றும் தொடர் ஆட்டநாயகனாக ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணியின் தலைவரான தசுன் ஷானக்க தெரிவானர்.
போட்டி சுருக்கம்
ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் – 133/7 (10) ஷெவோன் டேனியல் 26(15), மொஹமட் சஹ்ஷாத் 26(11), ட்ரவீன் மெதிவ் 18/2
ஜப்னா டைடன்ஸ் – 107/6 (10) டொம் அபேல் 54(27), ரிச்சார்ட் கீளிசன் 21/3(2), தசுன் ஷானக்க 4/2
முடிவு – ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் 26 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<