இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடர் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மேலதிகமாக குழந்தைகளின் வைத்திய பராமரிப்பிற்காகவும் சேவைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான LPL தொடர் மூலம் கொழும்பு சீமாட்டி ரிஜ்ட்வே வைத்தியசாலையின் ”லிட்டில் ஹார்ட்ஸ் (Little Hearts)” செயற்திட்டத்திற்காகவும் உதவி செய்யப்படவிருக்கின்றது.
>> வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசியக்கிண்ணம் ; ரசிகர்களுக்கு இலவச அனுமதி!
ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு குறிப்பிட்டதற்கு அமைய ”லிட்டில் ஹார்ட்ஸ் (Little Hearts)” செயற்திட்டத்திற்கு LPL தொடரிற்கு காணப்படுகின்ற சர்வதேச கவனம் மூலமாக நிதி திரட்டி வழங்கப்படவிருக்கின்றது.
அத்துடன் திரட்டப்படும் நிதியானது சீமாட்டி ரிஜ்ட்வே வைத்தியசாலையின் இதய தீவிர சிகிச்சைப் பிரிவினை (Cardiac and Critical Care Complex) நிர்மாணிக்க உபயோகம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை நிர்மாணிக்கப்படவிருக்கும் இதய தீவிர சிகிச்சைப் பிரிவானது, குழந்தைப் பருவ இதய நோய்களை குணப்படுத்த உபயோகம் செய்யப்படும் என சீமாட்டி ரிஜ்ட்வே வைத்தியசாலையின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதயம் சார்ந்த நோய்கள் இலங்கையில் குழந்தைகளின் தீடிர் இறப்பிற்கு காரணமான சிக்கலான நோய் நிலைமைகளாக கருதப்படுகின்றன. அதாவது குழந்தைப் பருவ இதய நோய்கள் காரணமாக இலங்கையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 10 குழந்தைகள் தங்களது முதல் அகவையினை கடக்க முன்னரே இறந்துவிடுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
>> இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இலங்கை A அணி
எனவே அமைக்கப்படவிருக்கும் இதய தீவிர சிகிச்சைப் பிரிவானது இலங்கையில் குழந்தைகளின் இறப்பினை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் எனக் கருதப்படுகின்றது.
அதேவேளை இந்த ஆண்டுக்கான LPL தொடரில் இதய தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ”Bat and Bowl for Little Hearts” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, LPL தொடரின் ஏற்பாட்டுக்குழு இயக்குனர் திரு. சமன்த தொடன்வெல குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான (2023) LPL T20 தொடரின் போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<