மீண்டும் ஒத்திவைக்கப்படும் LPL தொடர்!

Lanka premier League 2021

396
LPL

இலங்கையில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

LPL தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 22ஆம் திகதிவரை நடைபெறும் என்ற அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில், LPL தொடரை நடத்த முடியாத சூழ்நிலையால், எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை தொடரை நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜப்னா ஸ்டல்லியன்ஸ் அணிக்கு என்ன நடந்தது?

கடந்த சில நாட்களாக லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் LPL தொடரின் உரிமத்துவத்தை பெற்றுள்ள IPG நிறுவனம் என்பன இணைந்து, LPL தொடரின் 3 அணிகளின் உரிமத்தை நீக்குவதாக அறிவித்திருந்தன.

இதில் கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில், ஜப்னா ஸ்டல்லியன்ஸ் அணியும் நீக்கப்படுகின்றது என்ற தகவல் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

அத்துடன், T20I உலகக் கிண்ணம் நெருங்கி வருவதுடன், IPL தொடர், காஸ்மீர் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச போட்டிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு, வீரர்களை அழைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. எனினும், தொடரை நடத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எவ்வாறாயினும், தற்போது LPL தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, LPL தொடரானது, ஐசிசி T20I உலகக் கிண்ணத்தை தொடர்ந்து நடத்தப்படும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…