லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு

286
Lanka Premier League

இலங்கை அரசாங்கத்தின் கொவிட் – 19 விதிமுறைகள் மற்றும் சுய தனிமைப்படுத்தல் வழிமுறைகள் காரணமாக நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடருக்கான திகதியை மறுசீரமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் T 20 தொடரானது நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

>> மீண்டும் பிற்போடப்படும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக தொடரில் ஐந்து அணிகள் களமிறங்கவுள்ள நிலையில், காலி அணியை பாகிஸ்தானின் குவாட்டா கிளேட்டியேட்டர்ஸ் அணி வாங்கியது.

இந்த நிலையில், எஞ்சிய நான்கு அணிகளில் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய அணிகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறத்தில் உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சஹீட் அப்ரிடி, டெரன் சமி, சகிப் அல் ஹசன், ரவி பொபாரா, கொலின் மன்ரோ உள்ளிட்ட சுமார் 150 வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

>> Video – Finishing Stage இல் உள்ள டோனி | Cricket Galatta Epi 37

ஆனாலும், இலங்கையில் அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகின்ற 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் விதிமுறை காரணமாக முன்னணி வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

எதுஎவ்வாறாயினும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் ஆரம்பத்தில் 140 வீரர்களை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதனை 270 வீரர்களாக அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமாத்திரமின்றி, வெளிநாட்டு வீரர்கள் இலங்கை வந்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதாலும், .பி.எல் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் இலங்கை வந்து சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதாலும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரை 2 வாரங்கள் கழித்து நவம்பர் 21ஆம் திகதி முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

>> Video – 1982 ரிபெல் தொடருக்கு செல்லாததற்கான காரணத்தை கூறும் அசந்த டி மெல்!

இதுஇவ்வாறிருக்க லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆயத்தம் மற்றும் அதன் திகதியில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து அதன் பணிப்பாளர் ரவீன் விக்ரமரத்ன கருத்து வெளியிடுகையில்,

”நாங்கள் லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதற்கு தயாராக உள்ளோம். இப்போதைக்கு காலி, கண்டி, யாழ்ப்பணம் ஆகிய 3 அணிகள் வாங்கப்பட்டு விட்டன. இன்னும் 2 அணிகள் இந்த வாரத்துக்குள் விற்பனை செய்யப்படும் என போட்டிகளை நடத்தும் .பி.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது

அத்துடன், .பி.எல் தொடரானது நவம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்று இலங்கை வருகின்ற வீரர்களுக்கு சிறிது கால இடைவெளியை வழங்குவதற்கு தீர்மானித்தோம்

இதனால் லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நவம்பர் 21ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை (01) ஒன்லைன் மூலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

>> இலங்கை கிரிக்கெட்டின் புதிய குடிநீர் பங்காளராகும் Chrystal And life

எனினும், லங்கா ப்ரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள 2 அணிகளின் உரிமையாளர்கள் இதுவரை உறுதி செய்யப்படாத காரணத்தால் நாளை வீரர்களுக்கான ஏலம் நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<