LPL தொடரின் 13வது போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியை எதிர்கொண்ட ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது.
>>மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 11 பந்துகளில் 27 ஓட்டங்களை விளாசி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவரின் ஆட்டமிழப்பையடுத்து அஞ்செலோ பெரேரா நிதானகமாக ஆட, கிளேன் பிலிப்ஸ் வேகமாக துடுப்பெடுத்தாடினார்.
இவர்கள் இருவரும் 86 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்த நிலையில், அஞ்செலோ பெரேரா பந்து தலையில் தாக்கியதன் காரணமாக 34 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறினார். இவருடைய இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அசித பெர்னாண்டோ வீசிய பந்து தலையில் தாக்கியிருந்த போதும், தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நிலையில் களத்திலிருந்து வெளியேறினார்.
வேகமாக ஓட்டங்களை குவித்த கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியானது கிளேன் பிலிப்ஸ் விளாசிய 58 ஓட்டங்களுக்கு பின்னர் தடுமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், டஸ்கின் அஹ்மட் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோரின் 24 ஓட்ட இணைப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அஷ்மதுல்லாஹ் ஒமர்ஷாய் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் பகிர்ந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பத்தில் பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றம் காண்பித்தது. இதன்காரணமாக பவர்பிளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் ரெய்லி ரூஷோவ் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இவருக்கு இணையாக அவிஷ்க பெர்னாண்டோவும் சிறப்பாக ஆடினார். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 64 பந்துகளில் 120 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் வெற்றியிலக்கை இலகுவாக்கினர். இதில் அவிஷ் பெர்னாண்டோ 35 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
>>தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி
எனினும் இறுதிவரை களத்திலிருந்த ரெய்லி ரூஷோவ் LPL தொடரின் வேகமான சதத்தை பதிவுசெய்து, சரித் அசலங்கவுடன் இணைந்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் பெரேரா 50 பந்துகளில் சதமடித்து வேகமான சத சாதனையை கைவசம் வைத்திருந்தார். எனினும் ரெய்லி ரூஷோ 44 பந்துகளில் சதமடித்து அசத்தியிருந்தார். அதுமாத்திரமின்றி 50 பந்துகளில் 108 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கும் உதவினார். இவருடைய இந்த பிரகாசிப்பின் உதவியுடன் ஜப்னா அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
ஜப்னா கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 4 வெற்றிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<