LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக மதீஷ பதிரண

202

2024ஆம் ஆண்டுக்கான லங்கன் பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் வீரர்கள் ஏலம் இன்று (21) நடைபெற்றிருந்த நிலையில், இந்த ஏலம் குறித்த முக்கிய சில விடயங்களை பார்வையிடுவோம்.

>>நிறைவுக்கு வந்த குசல் மெண்டிஸின் வீசா சிக்கல்!

LPL T20 தொடரின் வீரர்கள் ஏலமானது இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏலத்திற்காக இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் 424 பேர் வரை தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணியானது பல இளம் வீரர்களை கொள்வனவு செய்திருந்தது. அதில் பெதும் நிஸ்ஸங்க ஜப்னா கிங்ஸ் அணியினால் 40,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்ததோடு, தென்னாபிரிக்காவின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ரைலி ரூசோவும் அவ்வணியினால் வாங்கப்பட்டிருந்தார். இவர்கள் ஒரு பக்கமிருக்க ஆஸி. பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரோன்ட்ரோபினையும் ஜப்னா கிங்ஸ் அணியானது தமக்காக தக்க வைத்திருந்தது.

வெளிநாட்டு வீரர்கள் ஒரு பக்கமிருக்க உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற தமிழ் பேசும் வீரர்களான மர்பின் அபினாஷ், அருள் பிரகாசம் மற்றும் இளம் சுழல்பந்துவீரர் தீசன் விதுஷன் ஆகியோரும் ஜப்னா கிங்ஸ் அணியின் வீரர்கள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதேநேரம் தமிழ் பேசும் வேகப்பந்துவீச்சாளராக காணப்படும் மொஹமட் சிராஸ் கோல் மார்வல்ஸ் அணியின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டிருந்தார்.

கோல் மார்வல்ஸ் அணியினை நோக்கும் போது மொஹமட் சிராஸ் தவிர இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரினை இசுரு உதானவினை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்தது. இவர் தவிர ஜிம்பாப்வே அணியின் சோன் வில்லியம்ஸ், ஆப்கானிஸ்தானின் சுழல்வீரர் முஜிபுர் ரஹ்மானையும் கோல் மார்வல்ஸ் அணியானது வாங்கியது.

திசர பெரேரா அணித்தலைவராக வருவார் என எதிர்பார்கக்ப்படும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியானது வீரர்கள் ஏலத்தில் இளம் வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரணவினை 120,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்முதல் செய்ததோடு இது LPL T20 போட்டிகள் வரலாற்றில் வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகூடிய ஏலத்தொகையாக (இலங்கை நாணயப்படி 3.6 கோடி ரூபாய்கள்) மாறியிருந்தது.

>>2024 LPL இல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியானது மதீஷ பதிரண தவிர துனித் வெல்லாலகே (50,000 அமெரிக்க டொலர்கள்), பினுர பெர்னாண்டோ (55,000 அமெரிக்க டொலர்கள்) ஆகியோரினையும் ஏலத்தில் கொள்வனவு செய்திருந்தது. அதேநேரம் பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட்டும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியினால் வாங்கப்பட்டிருந்தார்.

பி-லவ் கண்டி அணியானது இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்கவினை 85,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியிருந்ததோடு, அவ்வணியானது பாகிஸ்தானின் சல்மான் அலி அகா, அதிரடித் துடுப்பாட்டவீரர் அசாம் கான் ஆகியோரினையும் கொள்முதல் செய்தது.

தம்புள்ளை தண்டர்ஸ் அணியினை நோக்கும் போது அவ்வணி சிரேஷ்ட வீரர்களான அசேல குணரட்ன மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரை கொள்முதல் செய்ததோடு வெளிநாட்டு வீரர்களில் மிக முக்கியமானவராக பங்களாதேஷின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணிக்குழாம்கள்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<