லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இன்று (21) நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது குவாலிபையர் மோதலில், அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் பலமான பங்களிப்பின் ஊடாக ஜப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, இரண்டு மாற்றங்களையும் மேற்கொண்டிருந்தது. அணித்தலைவர் தசுன் ஷானக இந்த போட்டியிலும் உபாதை காரணமாக விளையாடாத நிலையில், லஹிரு சமரகோன் மற்றும் மேர்ச்சண்ட் டி லேங் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
19 வயதில் முச்சதம் அடித்து பாக். வீரர் ஹுரைரா சாதனை
ஜப்னா கிங்ஸ் அணியை பொருத்தவரை, அஷேன் பண்டார மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு பதிலாக, அஷான் ரந்திக மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.
முதலாவது குவாலிபையர் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, தங்களுக்கு எதிராக எவ்வாறானதொரு ஆரம்பத்தை பெற்றுக்கொண்டதோ, அதேபோன்ற ஒரு துடுப்பாட்ட ஆரம்பத்தை ஜப்னா கிங்ஸ் அணி இந்த போட்டியில் பெற்றுக்கொண்டது.
LPL தொடரில் அதிகூடிய ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை முதலாவது குவாலிபையர் போட்டியில், குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஜோடி பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இந்த போட்டியில் குறித்த சாதனையை அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் ஆகியோர் ஒரு ஓட்டத்தால் தகர்த்திருந்தனர்.
இவர்கள் இருவரும் 122 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்தனர். இதில், வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்த ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் ஹம்பாந்தோட்டையில் தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தை பதிவுசெய்து 40 பந்துகளில் 70 ஓட்டங்களை குவித்து, சாமிக்க கருணாரத்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
குர்பாஸின் ஆட்டமிழப்புக்கு பின்னரும், டொம் கொலர் கெட்மோர் மற்றும் திசர பெரேராவுடன் இணைந்து வேகமான முறையில் அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டங்களை குவித்தார். தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த அவிஷ்க பெர்னாண்டோ இறுதி ஓவர் வரை துடுப்பெடுத்தாடினார்.
குறிப்பாக இந்த ஆண்டு LPL தொடரில் முதல் சதத்தை பதிவுசெய்த இவர், LPL வரலாற்றில் இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டதுடன், T20 போட்டிகளை பொருத்தவரை தன்னுடைய முதல் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 64 பந்துகளை எதிர்கொண்டிருந்த இவர், 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, திசர பெரேரா மற்றும் கெட்மோர் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
இதன் மூலம் இந்த ஆண்டுக்கான அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த ஜப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இந்த போட்டியில் அறிமுகமாகிய லஹிரு சமரகோன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள ஜண்ட்ஸ் அணி வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான முறையில் துடுப்பெடுத்தாடியிருந்த தம்புள்ள அணிக்கு, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் பில் சோல்ட் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
எனினும், சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் 22 ஓட்டங்களை பெற்றிருந்த பில் சோல்ட், வனிந்து ஹஸரங்கவின் அபார பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழந்தார். தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி இதன் பின்னர் சிறந்த ஓட்ட வேகத்துடன், ஓட்டங்களை எடுத்தாலும், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மஹீஷ் தீக்ஷன வீசிய 5 ஆவது ஓவரில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் ஆட்டமிழந்து செல்ல, ஜெய்டன் சீல்ஸ் வீசிய அவருடைய முதல் ஓவரிலும் இரண்டு விக்கெட்டுகள் இழக்கப்பட்டன. இந்த ஓவரில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சந்துன் வீரகொடி வெளியேற்றப்பட 8 ஓவர்கள் நிறைவில் 79 ஓட்டங்களுக்கு தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
மீண்டும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட தம்புள்ள ஜண்ட்ஸ் அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு முழுமையாக குறைவடைந்தது. எனினும், சாமிக்க கருணாரத்ன மத்தியவரிசையில் போராடி ஓட்டங்களை குவித்தார். ஒருகட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கு, சாமிக்க கருணாரத்ன தனியாளாக ஓட்டங்களை குவித்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற இவர், 47 பந்துகளில் 75 ஓட்டங்ளை பெற்றுக்கொடுத்த போதிலும், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்காள்ள முடிந்தது. எனவே, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.
ஜப்னா கிங்ஸ் அணியை பொருத்தவரை, ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மஹீஷ் தீக்ஷன மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி இரண்டாவது தடவையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் இறுதிப்போட்டியிலும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டு சம்பியனாகிய ஜப்னா கிங்ஸ் அணி, இம்முறை மீண்டும் அதே அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி நாளை மறுதினம் (23) ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | c & b | 100 | 64 | 0 | 0 | 156.25 |
Rahmanullah Gurbaz | c & b | 70 | 40 | 0 | 0 | 175.00 |
Tom Kohler-Cadmore | c & b | 15 | 8 | 0 | 0 | 187.50 |
Thisara Perera | not out | 11 | 7 | 0 | 0 | 157.14 |
Shoaib Malik | c & b | 6 | 3 | 0 | 0 | 200.00 |
Extras | 8 (b 0 , lb 2 , nb 2, w 4, pen 0) |
Total | 210/4 (20 Overs, RR: 10.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Pradeep | 4 | 0 | 30 | 0 | 7.50 | |
Marchant De Lange | 4 | 0 | 47 | 1 | 11.75 | |
Imran Tahir | 4 | 0 | 24 | 0 | 6.00 | |
Chamika Karunaratne | 4 | 0 | 53 | 1 | 13.25 | |
Lahiru Udara | 2 | 0 | 30 | 2 | 15.00 | |
Ramesh Mendis | 2 | 0 | 24 | 0 | 12.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Phil Salt | c & b | 22 | 11 | 0 | 0 | 200.00 |
Niroshan Dickwella | c & b | 18 | 12 | 0 | 0 | 150.00 |
Sandun Weerakkody | c & b | 12 | 10 | 0 | 0 | 120.00 |
Janith Liyanage | c & b | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Najibullah Zadran | c & b | 21 | 15 | 0 | 0 | 140.00 |
Ramesh Mendis | c & b | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Chamika Karunaratne | not out | 75 | 47 | 0 | 0 | 159.57 |
Lahiru Udara | c & b | 8 | 4 | 0 | 0 | 200.00 |
Marchant De Lange | c & b | 9 | 1 | 0 | 0 | 900.00 |
Imran Tahir | c & b | 6 | 5 | 0 | 0 | 120.00 |
Nuwan Pradeep | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 15 (b 4 , lb 0 , nb 1, w 10, pen 0) |
Total | 187/9 (20 Overs, RR: 9.35) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mahesh Theekshana | 4 | 0 | 23 | 2 | 5.75 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 32 | 1 | 8.00 | |
Suranga Lakmal | 2 | 0 | 25 | 1 | 12.50 | |
Shoaib Malik | 1 | 0 | 15 | 0 | 15.00 | |
Jayden Seales | 4 | 0 | 24 | 3 | 6.00 | |
Thisara Perera | 4 | 0 | 50 | 2 | 12.50 | |
Chathuranga de Sliva | 1 | 0 | 4 | 0 | 4.00 |
முடிவு – ஜப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<