இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் அதிக பலமிக்க அணிகளில் ஒன்றாக கண்டி வொரியர்ஸ் அணி காணப்படுகின்றது.
கடந்த பருவகால LPL தொடரில் கண்டி (டஸ்கர்ஸ்) அணி, கடைசி இடத்தினைப் பதிவு செய்த போதும் கடந்த கால தரவுகளை வைத்து, இந்த முறை கண்டி வொரியர்ஸ் அணியினை எந்த விதத்திலும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.
>>LPL தொடரின் இரண்டாவது கிண்ணத்தை குறிவைக்கும் ஜப்னா!
இதற்குப் பிரதான காரணம் இந்த ஆண்டுக்கான LPL தொடரில் கண்டி அணி கட்டமைப்பு, வீரர்கள் குழாம் என பல்வேறு வகைகளிலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பயிற்சியாளர் குழாம்
கண்டி வொரியர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாரளாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளரும், IPL தொடரில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர்களில் ஒருவருமான லால்சாண்ட் ராஜ்பூட் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த LPL தொடரில் மிகவும் அனுபவமிக்க பயிற்சியாளராக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லால்சாண்ட் ராஜ்பூட், மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2007ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் போது, இந்திய கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அணியின் உதவிப் பயிற்சியாளராக ருவின் பீரிஸ் காணப்பட, அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் இந்தியாவின் அதுல் வாசன், மன்பிரீட் சிது ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலைவர், பிரதி தலைவர்
இதேநேரம் கடந்த பருவகாலத்தில் குசல் ஜனித் பெரேரா மூலம் வழிநடாத்தாப்பட்டிருந்த கண்டி அணி, இந்த முறை அஞ்செலோ பெரேராவின் ஆளுகைக்குள் வந்திருக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியில் நிரந்தர வீரராக இடம்பெறாத போதும், அஞ்செலோ பெரேரா இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவனாக இருப்பதோடு, இலங்கையின் முதன்மை கழகங்களில் ஒன்றான NCC அணியினை தலைமை தாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் கண்டி வொரியர்ஸ் அணியின் பிரதி தலைவராக நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமாக திகழ்ந்த சரித் அசலன்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த காலங்களில் பெரிதாக அறியப்பட்டிருக்காத சரித் அசலன்க, இன்று கண்டி வொரியர்ஸ் அணியின் அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அணிக்குழாம்
முன்னர் குறிப்பிட்டது போன்று இந்த LPL தொடரில் களமிறங்கும் பலமான அணித்தொகுதியாக கண்டி வொரியர்ஸ் அணியின் குழாம் காணப்படுகின்றது. அணியின் துடுப்பாட்டத் துறையினை நோக்கும் போது T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த சரித் அசலன்க கண்டி அணியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய துடுப்பாட்ட வீரராக அமைகின்றார். அதேநேரம் பாகிஸ்தானின் அதிரடி ஆரம்ப வீரரான அஹ்மட் ஷெஹ்சாத்தும், கண்டி வொரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கின்றார்.
அஹ்மட் ஷெஹ்சாத் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் ஒழுங்கு செய்த நெஷனல் T20 தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற முதல் 5 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருப்பதோடு, பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>தனன்ஜய, மெண்டிஸ், எம்புல்தெனியவின் அபாரத்தால் 2-0 என தொடரை வென்ற இலங்கை
இந்த வீரர்கள் தவிர இந்த பருவகாலத்திற்கான அபுதாபி T10 லீக்கில் நொதர்ன் வொரியர்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்து அதில் அதிக ஓட்டங்கள் பெற்ற முன்னணி வீரர்களில் ஒருவராக இருக்கும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ரொவ்மன் பவலும் கண்டி வொரியர்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களான கென்னர் லூயிஸ், டெவோன் தோமஸ் ஆகிய இருவரும் வெளிநாட்டு வீரர்களாக கண்டி அணிக்கு மேலும் பலம் தருகின்றனர். இதேவேளை கமிந்து மெண்டிஸ், அணித்தலைவர் அஞ்செலோ பெரேரா, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் மினோத் பானுக்க மற்றும் அசேல குணரட்ன போன்ற வீரர்களினாலும் கண்டி வொரியர்ஸ் அணியின் துடுப்பாட்டத்துறை பலம் பெறுகின்றது.
கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சினைப் பொறுத்தவரை இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ ஆகியோருடன், சுழல்பந்துவீச்சாளரான நிமேஷ் விமுக்தி மற்றும் சசிந்து கொலம்பகே ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
இறுதியாக,
விடயங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த ஆண்டுக்கான LPL தொடரில் சம்பியன் பட்டம் வெல்வதற்கான எதிர்பார்க்கை அணிகளில் ஒன்றாகவே கண்டி வொரியர்ஸ் அணி இருக்கின்றது.
ஆனால், T20 போட்டிகளினை பொறுத்தவரை எதனையும் எதிர்வு கூறவும் முடியாது. எனவே, முடிவுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதனை LPL தொடர் நடைபெறும் பொழுதே பார்க்க முடியும்.
கண்டி வொரியர்ஸ் குழாம்
இலங்கை வீரர்கள் – சரித் அசலன்க, அஞ்செலோ பெரேரா (அணித்தலைவர்), கமிந்து மெண்டிஸ், அசேல குணரட்ன, மிலிந்த சிறிவர்தன, இஷான் ஜயரட்ன, திலகரட்ன சம்பத், அயான சிறிவர்தன, நிமேஷ் விமுக்தி, சஷிக டுல்ஷான், கல்ஹார சேனரட்ன, மினோத் பானுக்க, கமில் மிஷார, சசிந்து கொலம்பகே, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ
வெளிநாட்டு வீரர்கள்
சிராஸ் அஹ்மட் (ஐக்கிய அரபு இராச்சியம்), அல்-அமீன் ஹொசைன் (பங்களாதேஷ்), டெவோன் தோமஸ் (மேற்கிந்திய தீவுகள்), கென்மார் லூயிஸ் (மேற்கிந்திய தீவுகள்), ரொவ்மன் பவல் (மேற்கிந்திய தீவுகள்), அஹ்மட் ஷெஹ்சாத் (பாகிஸ்தான்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<