தம்புள்ள ஜயண்ட்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற LPL தொடரின் 8ஆவது லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஜயண்ட்;ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய தம்புள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பில் சோல்ட்டின் விக்கெட்டினை போட்டியின் இரண்டாவது ஓவரின் முதலாவது பந்தில் நுவன் துஷார கைப்பற்ற, அடுத்து வந்த டில்ஷான் முனவீர 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிரோஷன் டிக்வெல்ல, 30 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த நஜிபுல்லாஹ் ஷத்ரான் ஓட்டமேதுமின்றியும் நூர் அஹ்மட்டின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டழிழந்து ஓய்வறை திரும்பினர்.
தொடர்ந்து புதிய வீரராக மைதானம் வந்த சொஹைப் மக்சூத்தும் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் ரமேஷ் மெண்டிஸ் இணைந்து சிறிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர். இவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது, தசுன் ஷhனக 37 ஓட்டங்களுடன் ஆட்டமிக்க, அடுத்து வந்த சாமிக்க கருணாரத்னவுடன் இணைந்து ரமேஷ் மெண்டிஸ் மீண்டுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பி வேகமாக ஓட்டங்களைக் குவித்தனர்.
- திசர, அவிஷ்கவின் அதிரடியால் ஜப்னா கிங்ஸ் திரில் வெற்றி
- சோல்ட், தரிந்து மற்றும் ஷட்ரானின் பிரகாசிப்புடன் ஜயண்ட்ஸ் அணிக்கு 2வது வெற்றி
- இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்த கோல் கிளேடியட்டர்ஸ்
இதில், சாமிக்க கருணாரத்ன ஒரு சிக்சர் மற்றும் ஒரு பௌண்டரியுடன் 13 ஓட்டங்களை எடுத்து வெளியேறிய, ரமேஷ் மெண்டிஸின் கடைசி நேர அதிரடியுடன் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தம்புள்ள அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் தசுன் ஷhனக 37 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் நூர் அஹ்மட் மற்றும் நுவன் துஷார ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 160 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.
அந்த அணி 1.2 ஓவர்களில் 18 ஓட்டங்களை அடித்து வேகமான ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டியை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 15 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 3 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
எனவே, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன்படி, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி ஐந்து புள்ளிகளை எடுத்து முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி – 159/7 (20) – தசுன் ஷானக 37, ரமேஷ் மெண்டிஸ் 33*, நூர் அஹ்மட் 2/24, நுவன் துஷார 2/24
கோல் கிளேடியேட்டர் அணி – 18/0 (1.2)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<