நேபாளம் அணியுடன் இணையும் சந்தீப் லமிச்சேனா

ICC Men's T20 World Cup

198

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதாகி சிறைத்தண்டணை விதிக்கப்பட்டு அண்மையில் விடுதலையாகிய நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான சந்தீப் லமிச்சேனா T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகளை சென்றடைந்துள்ளார்.

இதன்படி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நேபாளம் அணி விளையாடவுள்ள கடைசி 2 லீக் போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாளை (12) நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.      

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான சந்தீப் லமிச்சேனாவின் மீது கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சேனா மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி வழக்குப்பதிவு செய்தது. 

அப்போது, சந்தீப் லமிச்சேனா கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர், சந்தீப் லமிச்சேனா கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் திகதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப் லமிச்சேனாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன 

இந்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் குற்றத்தின் அடிப்படையில் சந்தீப் லமிச்சேனாவை சுந்தராவில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி சந்தீப் லமிச்சேனா நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது, நீதிபதி துருவ்ராஜ் நந்தா மற்றும் நீதிபதி ரமேஷ் தஹல் ஆகியோர் அடங்கிய பதான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி சில நிபந்தனைகளுடன் சந்தீப்பை விடுவிக்க உத்தரவிட்டநிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

எனினும் நேபாளம் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மேலும் தண்டனை தொடர்பான விபரத்தை, ஜனவரி மாத ஆரம்பத்தில் தெரிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. 

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 10ஆம் திகதி தண்டனை தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்டவருக்கு 2 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. சந்தீப் லமிச்சேனாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, நேபாள கிரிக்கெட் சபையும் அவரை இடைநீக்கம் செய்தது. மேலும், அவரும் கைது செய்யப்பட்டார். 

அதேநேரத்தில், இத்தண்டனையை எதிர்த்து லாமிச்சானே தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணை முடிந்து கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 8 ஆண்டுகள் சிறைதண்டனையும் இரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், T20 உலகக் கிண்ணத்துக்கான ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நேபாளம் அணியில் சந்தீப் லமிச்சேனா இடம்பெறவில்லை. எனினும், விடுதலையான பின்னர் அவரை 15 பேர் கொண்ட அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்நிலையில் தான் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனாவிற்கு அமெரிக்கா வீசா வழங்க மறுத்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வீசா நேர்காணலில் லமிச்சன் கலந்து கொண்டார். எனினும், அவர் பாலியல் வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டதால் அவருக்கு வீசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்தது. எவ்வாறாயினும், நேபாள அரசின் தலையீட்டினால் அவருக்கு வீசா கிடைக்கப் பெற்றதுடன், தற்போது T20 உலகக் கிண்ணத்தில் ஆட மேற்கிந்தியத் தீவுகளை சென்றடைந்துள்ளார் 

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் குழு டி இல் இடம்பிடித்துள்ள நேபாளம் அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியதுடன், நாளை நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது. இந்த 2 போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதுடன், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் ஆட மேற்கிந்தியத் தீவுகளுக்கு அந்த அணி செல்லவுள்ளது. எனவே, குறித்த 2 போட்டியிலும் சந்தீப் லமிச்சேனா விளையாடுவதற்கான வாய்;ப்பு இருப்பதாக தெரிவிக்;கப்பட்டுள்ளது.    

சந்தீப் லமிச்சேனா நேபாளத்தி;காக 51 ஒருநாள் மற்றும் 51 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் ஒருநாள் போட்டியில் 112 விக்கெட்டுகளையும், T20i இல் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இது தவிர ஐபிஎல்லில் விளையாடிய முதல் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனா ஆவார். அவர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அதேபோல, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகின்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் சென்.கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி, பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி மற்றும் ஜமைக்கா தலவாஸ் அணிகளுக்காக ஆடிய அனுபவத்தை அவர் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<