நேபாள கிரிக்கெட் அணியின் சந்தீப் லமிச்சானேவிற்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான வீசா மறுக்கப்பட்டதனை அடுத்து, அவர் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
>>சந்தீப் லமிச்சானேவை குற்றவாளி இல்லை என அறிவித்த நீதிமன்றம்
T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கின்றது. இந்த நிலையில் தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான நேபாளம் T20 உலகக் கிண்ணத்திற்கான குழு D இல் பெயரிடப்பட்டுள்ளதோடு, நேபாள அணி விளையாடும் முதல் இரண்டு குழுநிலைப் போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
விடயங்கள் இவ்வாறிருக்க தன் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு குற்றச்சாட்டிலிருந்து போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அண்மையில் விடுபபட்டிருந்த சந்தீப் லமிச்சானே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் நேபாள அணிக்காக T20 உலகக் கிண்ணத் தொடரிலும் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனவே நேபாள கிரிக்கெட் சபை அவரினை நேபாள அணியில் இணைக்க ஐக்கிய அமெரிக்க வீசா பெறுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருந்தது.
எனினும் லமிச்சானேவின் ஐக்கிய அமெரிக்க வீசா விண்ணப்பம் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் நேபாள கிரிக்கெட் சபை மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டிருந்ததோடு தற்போது அதுவும் பலனளிக்காது போக லமிச்சானேவின் வீசா விண்ணப்பம் மீண்டும் இரண்டாவது தடவையாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே லமிச்சானே T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவது சந்தேகமாகியிருக்கின்றது. ஆனால் லமிச்சானேவின் அமெரிக்க வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
>>தோல்வியுடன் T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளை ஆரம்பித்த இலங்கை
நேபாள அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் ஜூன் 7ஆம் திகதி நெதர்லாந்தினை எதிர்கொள்ளவிருப்பதோடு, அதன் பின்னர் நேபாள அணியானது இலங்கை அணியினை ஜூன் 11ஆம் திகதி மோதுகின்றது. அதனையடுத்து மேற்கிந்திய தீவுகளில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் நேபாளம் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<