மெஸ்ஸியின் இரட்டை கோலால் லா லிகாவில் பார்சிலோனா முதலிடம்

500

லியோனல் மெஸ்ஸியின் இரட்டைக் கோல் மற்றும் இரண்டு கோல் உதவிகள் மூலம் ரியல் வல்லடொலிட் அணிக்கு எதிரான 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தால் வெற்றிபெற்ற பார்சிலோனா அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னெற்றம் கண்டது. 

தனது சொந்த மைதானமான காம்ப் நூவில் இலங்கை நேரப்படி இன்று (30) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியின் 2ஆவது நிமிடத்தில் பார்சிலோனா பின்கள வீரர் உலெமன்ட் லெங்லட் நேர்த்தியான கோல் ஒன்றை பெற்றார். 

டொட்டன்ஹாமை வீழ்த்தி லிவர்பூர் தொடர்ந்து ஆதிக்கம் : முன்னேற்றம் கண்ட யுனைடட்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய…….

எனினும், மார்க் அன்ட்ரே டெர் ஸ்டஜன் செய்த தவறை பயன்படுத்தி கிகோ ஒலிவாஸ் பதில் கோல் திருப்பியதால் வல்லடொலிட் அணி 15ஆவது நிமிடத்தில் ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தது. 

இந்நிலையில் மெஸ்ஸி பெனால்டி பெட்டிக்குள் பரிமாற்றிய பந்தை பெற்ற ஆர்துஸ் விடால் கோல் புகுத்த 29ஆவது நிமிடத்தில் பார்சிலோனா மீண்டும் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மெஸ்ஸி ப்ரீ கிக் மூலம் அபார கோல் ஒன்றை பெற்றார். மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்வில் ப்ரீ கிக் மூலம் கோல் பெற்ற 50ஆவது சந்தர்ப்பமாக இது இருந்தது. 

முதல் பாதி: பார்சிலோனா 3 – 1 ரியல் வல்லடொலிட்

இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்திலும் பார்சிலோனாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. 75ஆவது நிமிடத்தில் இவான் ரகிடிச் தந்த பந்தை கச்சிதமாக பெற்ற மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை புகுத்தினார். இதனைத் தொடர்ந்து மெஸ்ஸி பரிமாற்றிய பந்தைக் கொண்டு லுவிஸ் சுவாரஸ் பார்சிலோன சார்பில் 5ஆவது கோலை பெற்றார்.

பார்சிலானா கடந்த வார இறுதியில் லா லிகா போட்டியில் களமிறங்காத நிலையிலேயே இந்தப் போட்டியில் ஆடியது. கட்டலோனியாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ரியல் மெட்ரிட் அணிக்கு எதிரான பார்சிலோனாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வார இறுதிப் போட்டி பாதுகாப்புக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இதனால் வார இறுதியில் நடந்த ரியல் பெட்டிஸ் அணிக்கு எதிரான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற கிரனடா அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. எனினும் ரியல் வல்லடொலிட் அணியை இலகுவாக வென்ற பார்சிலோனா 2 புள்ளிகள் இடைவெளியில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.      

முழு நேரம்: பார்சிலோனா 5 – 1 ரியல் வல்லடொலிட்

கோல் பெற்றவர்கள்

பார்சிலோனா – உலெமன்ட் லெங்லட் 2’, ஆர்துஸ் விடால் 29’, மெஸ்ஸி 34’, 75’, லுவிஸ் சுவாரஸ் 77’

ரியல் வல்லடொலிட் – கிகோ ஒலிவாஸ் 15’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<