பல வீரர்கள் நீக்கம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு

2029
Lakmal, Oshada and Chandimal

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (3) ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இப்போட்டிக்கான இலங்கை அணியில் பல முன்னணி வீரர்கள் உபாதை காரணமாக விளையாட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>> விராட் கோலி, ஸ்மித் ஆகியோரினை பின்தள்ளிய கேன் வில்லியம்சன்

கடந்த வாரம் செஞ்சசூரியன் நகரில் நிறைவுக்கு வந்த இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. 

எனவே, இந்த டெஸ்ட் தொடரினை தக்கவைக்கவும், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளை பெறும் நோக்கிலேயும் இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் கட்டாய வெற்றியொன்றினை எதிர்பார்த்துவருகின்ற நிலையிலையே, முன்னணி வீரர்களின் உபாதையும் இலங்கை அணிக்கு சரிவினை ஏற்படுத்தியிருக்கின்றது. 

அதன்படி, உபாதைக்கு உள்ளாகியிருக்கும் வீரர்களில் முதன்மையானவராக துடுப்பாட்ட வீரரான தனன்ஞய டி சில்வா காணப்படுகின்றார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் பெற்று துடுப்பாடிக் கொண்டிருந்த போது தொடைத்தசை உபாதையினை எதிர்கொண்ட தனன்ஞய டி சில்வா அப்போட்டியின் போதே இலங்கை அணி ஆடும் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதேநேரம், தனன்ஞய டி சில்வா இலங்கை அணி தாம் அடுத்ததாக இங்கிலாந்துடன் விளையாடவிருக்கின்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதிலும் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனன்ஞய டி சில்வா ஒரு புறமிருக்க, முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு உள்ளான வேகப் பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோரும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றனர். இதனால், இவர்களுக்கும் தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது. 

அடுத்ததாக இலங்கை அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியின் அரைச்சதம் ஒன்றினை விளாசிய தினேஷ் சந்திமாலும், உட்தொடைத் தசை உபாதையினால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என ThePapare.com இற்கு அறியக்கூடியதாக இருக்கின்றது. 

>> விராட் கோலி, ஸ்மித் ஆகியோரினை பின்தள்ளிய கேன் வில்லியம்சன்

இவர்களுடன், முதல் டெஸ்ட் போட்டியில் தங்களது உடற்தகுதியினை நிரூபிக்கத் தவறிய சுரங்க லக்மால் மற்றும் ஒசத பெர்னாந்து ஆகியோரும் இலங்கை அணி அடுத்ததாக விளையாடுகின்ற போட்டியில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது. 

மறுமுனையில், முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு ஆளான வனிந்து ஹஸரங்கவும் அடுத்த போட்டிக்கான போதிய உடற்தகுதியினை நிரூபித்த பின்னரே அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

வனிந்து ஹஸரங்கவின் உபாதை கருத்திற்கொள்ளப்படாத போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நான்கு வீரர்கள் இரண்டாம் போட்டியில் விளையாடவில்லை. எனவே, இவர்களின் இடத்தினை நிரப்ப அனுபவ வீரர்கள் எனக் கருத்திற்கொள்ளும் போது லஹிரு திரிமான்ன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான நேரடி வாய்ப்பினைப் பெறுகின்றனர். இவர்களுடன் இரண்டு அறிமுக வீரர்களுக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

அந்தவகையில், மினோத் பானுக்க, சந்துஷ் குணத்திலக்க, டில்ஷான் மதுசங்க மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோர் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெறுவதற்கான வாய்ப்பினை இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி மூலம் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<