இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடன் தாஸ் ஆகிய இருவருக்கும் ஐசிசியினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத்தில் நேற்று (24) நடைப்பெற்ற 15ஆவது லீக் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதின. இப்போட்டியில் சரித் அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷவின் அதிரடியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனிடையே, இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர் லிட்டன் தாஸ், Power Play யின் கடைசி ஓவரில் லஹிரு குமாரவின் பந்தை தூக்கி அடிக்க முயன்று தசுன் ஷானாகவிடம் பிடிகொடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
<<பானுக, அசலங்கவின் அசத்தலால் அபார வெற்றியை பதிவுசெய்த இலங்கை>>
அவர் ஆட்டமிழந்தவுடன் லிட்டன் தாஸை நோக்கி லஹிரு குமார ஆக்ரோஷமான முறையில் வார்த்தைகளை விட்டார். லிடன் தாஸும் பதிலுக்குக் கடுமையாகப் பேச வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆடுகளத்தில் இருந்த மொஹமட் நயிம் வாக்குவாதத்தை விலக்கிவிட குமாரவைத் தள்ளினார். இதன்பிறகு, இலங்கை வீரர்களும் நடுவர்களும் இருவரையும் விலக்கி அனுப்பி வைத்தனர்.
எனினும், லிடன் தாஸ் துடுப்பு மட்டையை உயர்த்தி எதையோ சொல்ல குமார மீண்டும் ஆக்ரோஷமாக சண்டையிட முற்பட்டார். இதனால், ஆட்டத்தின் நடுவே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அதன்பிறகு போட்டி சுமுகமாக நடைபெற்றது.
ஐசிசியின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறையின் முதலாவது பிரிவின் கீழ் இந்த வீரர்களின் செயல் குற்றமாகும். இதன்காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் போட்டியின் மத்தியஸ்தராக செயல்பட்ட ஜவகல் ஸ்ரீநாத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வீரர்கள் இருவரும் தாம் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன்படி, ஐசிசியின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளின் 2.5 சரத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை வீரர் லஹிரு குமாரவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும், 2.20 சரத்தை மீறிய குற்றச்சாட்டில் லிடன் தாஸுக்கு 15 சதவீதமும் அபாராமாக விதிக்க ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், குறித்த வீரர்கள் இருவருக்கும் தண்டனைப் புள்ளியாக தலா ஒரு மறை புள்ளியும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த இரு வீரர்களும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் குறித்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்படாது என ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2018இல் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் வீரர்கள் மோசமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை மிகப் பெரிய கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
<<மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>