உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய ஆரம்ப குழாம் அறிவிப்பு!

ICC Cricket World Cup 2023

241

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 18 பேர்கொண்ட பூர்வாங்க குழாத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குழாத்தில் தன்வீர் சங்கா, நேதன் எல்லிஸ் மற்றும் ஆரோன் ஹர்டி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படடுள்ளதுடன், முன்னணி வீரர் மார்னஸ் லபுசேங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

>> சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலெக்ஸ் ஹேல்ஸ்

குறிப்பிட்ட இந்த 18 பேர்கொண்ட குழாமானது உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளது. அதன் பின்னர் இறுதி குழாம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அணியின் முன்னணி சகலதுறை வீரரான கிளேன் மெக்ஸ்வெல் தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாபிரிக்க தொடரில் விளையாடமாட்டார் எனவும் அவர் நேரடியாக இந்தியாவில் வைத்து அணியுடன் இணைந்துக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் ஆஷஷ் தொடரின் போது உபாதைக்குள்ளாகியிருந்த அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் மிச்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஷல்வூட் மற்றும் சீன் எபோட் போன்ற முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அணியின் சுழல் பந்துவீச்சாளர்களாக அடம் ஷாம்பா மற்றும் அஷ்டன் ஆகர் ஆகியோரும், சகலதுறை வீரர்களாக கிளேன் மெக்ஸ்வெலுடன் மிச்சல் மார்ஷ், மார்கஸ் ஸ்டொயினிஸ், கெமரூன் கிரீன் மற்றும் டிராவிஷ் ஹெட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் பலமான துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் இங்கிஷ் மற்றும் அலெக்ஸ் கேரி போன்ற வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<