லியோனல் மெஸ்ஸிசியின் சாதனையுடன் பில்பாவோ அணியை வெற்றிகொண்ட பார்சிலோனா

289
international football tamil

2015/16ஆம் ஆண்டுக்கான லா லிகா சம்பியனான பார்சிலோனா கால்பந்து கழக அணி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணியை 3-௦ என்ற கோல்கள் அடிப்படையில் வென்றதன் மூலம் நடப்பு ஆண்டுக்கான தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மட்ரிட் அணிக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

குறித்த போட்டியில் கிடைக்கப் பெற்ற இலவச உதையினை கோலாக மாற்றியதன் மூலம் லியோனல் மெஸ்ஸி குறித்த லீக் போட்டியில் கூடிய கோல்களை பெற்றுக்கொண்ட வீரராகவும் பதிவானார்.

கடந்த ஆண்டு  வலான்சிய அணியிலிருந்து பார்சிலோனா அணிக்கு இணைந்து கொண்ட பாகோ அல்கசிர், போட்டியின் 18வது நிமிடம் நெய்மர் உள்செல்லுதிய பந்தை கோலாக மாற்றி லீக் போட்டிகளில் தனது முதலாவது கோலை பதிவு செய்தார். அத்துடன் போட்டியின் 40ஆவது நிமிடம் கோல் அடித்த லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கான தனது 27ஆவது கோலைப் பதிவு செய்தார்.

மூன்றாவதும் இறுதியுமான கோலை அலிக்ஸ் விடல் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் அடித்து அனைவரதும் கவனத்தை ஈர்த்தார். எனவே, இந்த வெற்றியுடன் ரியல் மட்ரிட் அணியை விட ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது பார்சிலோனா அணி.

அதேநேரம், ரியல் மட்ரிட் மற்றும் செல்டா வீகொ அணிகளுக்கிடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த ஆட்டம் பிற்போடப்பட்டுள்ளது. லீக் போட்டிகளில் மூன்றாம் இடத்திலுள்ள செவிலா மற்றும் லாஸ் பால்மஸ் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஹம்சிக் மற்றும் மேர்டனின் ஹட்ரிக் கோல்களின் மூலம் போலோக்ன அணியை வெற்றி கொண்ட நேபோலி  

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இத்தாலிய A தொடருக்கான போலோக்ன மற்றும் நேபோலி அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹம்சிக் மற்றும் மேர்டனின் ஆகியோரின் ஹட்ரிக் கோல்களின் மூலம் 7-1 என்ற கோல்கள் அடிப்படையில் நேபோலி அணி வெற்றி கொண்டது.

குறித்த போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியினூடாக நேபோலி அணி இத்தாலிய A தொடருக்கான கூடிய (55) கோல்களை பெற்றுக்கொண்ட அணியாக பதிவாகியுள்ளதுடன், 48 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில், ஜுவண்டஸ் அணி 51 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், நேபோலி மற்றும் ஜெனோவா அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இத்தாலியிலுள்ள ஸ்டாடியோ சான் பவுலோ கால்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆபிரிக்க கால்பந்து கிண்ணத்துக்கான மூன்றாவது இடத்தை கைப்பற்றிய புர்கினா பாசோ அணி

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற புர்கினா பாசோ மற்றும் கானா அணிகளுக்கிடையே ஆபிரிக்க கால்பந்து கிண்ணத்தின் மூன்றாவது இடத்துக்கான விறுவிறுப்பான போட்டியில் 89ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றினை பெற்று 1-0 என்ற கணக்கில் கானா அணியை வெற்றி கொண்டது புர்கினா பாசோ அணி.

எகிப்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் கசப்பான அனுபவத்துடன் பெனால்டி சூட் அவுட்டில் இறுதிப் போட்டிக்காக வாய்ப்பை தவறவிட்ட புர்கினா பாசோ அணி, இந்த போட்டியில் இறுதி நேரத்தில் கோல் ஒன்றைப் பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டமை முக்கிய விடயமாகும்.

அதேநேரம், நான்கு தொடர்களில் போட்டியிட்ட கானா அணி, தொடர்ந்து மூன்று தடவைகள் மூன்றாவது இடத்துக்கு போட்டியிட்டுள்ள நிலையில், அவை அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயென் முனிச் அணியுடனான போட்டியை சமப்படுத்திய சால்க்க கால்பந்து அணி!

ஜேர்மன், பெடரல் லீக் போட்டிகளில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வலிமைமிக்க பயென் முனிச் அணியுடான போட்டியை சமநிலையுடன் முடித்துக்கொண்டது 12 ஆம் இடத்திலுள்ள சால்க்க கால்பந்து அணி!

உலக புகழ் பெற்ற வீரரும் 2014ஆம் ஆண்டு ஜேர்மன் அணியை தலைமை தாங்கி சம்பியன் பட்டம் வெல்லுவதற்கு வழிவகுத்தவருமான பிலிப் லாஹ்ம், பயென் முனிச் அணிக்காக தனது 500ஆவது போட்டியில் களமிறங்கினார். இதில் முதல் பாதி நேரத்தின் 9ஆவது நிமிடம் பயென் முனிச் அணி சார்பாக லெவன்டாஸ்கி முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன் கோல் எண்ணிகையை நீடிக்க அவ்வணிக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும் அவை வீணடிக்கப்பட்டன. எனினும் போட்டியின் 13ஆவது நிமிடம் சால்க்க அணிக்கு கிடைக்க பெற்ற இலவச உதையை சரியாக பயன்படுதிக்கொண்ட நல்டோ, கோல் ஒன்றை அடித்தார். அதன் பின்னர் இவ்விரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட போதிலும் போட்டி சமநிலையில் முடிவுற்றது.