இந்தப் பருவகால லா லிகா கால்பந்து தொடரின் மூன்றாம் வாரத்திற்கான போட்டிகளின் முடிவில் ரியல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா கழகங்கள் அதிகூடிய கோல்களுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
அதேவேளை, இப்பருவகாலத்திற்கான UEFA சுபர் கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணி, செல்டாவிகோ அணியை எதிர்கொண்டு லா லிகா தொடரின் முதலாவது தோல்வியை சந்தித்தது.
செல்டாவிகோ எதிர் அட்லடிகோ மெட்ரிட்
ஸ்பெய்னின் வீகோ நகரில் அமைந்துள்ள செல்டாவிகோ அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் செல்டாவிகோ அணி வெற்றி பெற்றது. முதல் பாதியிலே பல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றும் இரு அணி வீரர்களாலும் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை.
இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்
லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் …
எனினும், இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலேயே மெக்ஸிமிலானோ கோமெஸ் மற்றும் இயாகோ அஸ்பஸ் ஆகிய செல்டாவிகோ வீரர்களால் 46 மற்றும் 52 ஆம் நிமிடங்களில் பெறப்பட்ட இரு கோல்களின் மூலம் அவ்வணி வெற்றிபெற்றது.
இதனால், அட்லடிகோ மெட்ரிட் அணி இப்பருவகாலத்தின் முதல் தோல்வியை பதிவு செய்தது.
ரியல் மெட்ரிட் எதிர் லெகனேஸ்
ரியல் சொசிடட் அணியுடனான போட்டியை கடந்த வாரம் வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்த லெகனேஸ் அணி வலுவான ரியல் மெட்ரிட் அணியுடனான இவ்வாரப் போட்டியில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
ரியல் மெட்ரிட் அணியுடன் இணைந்துள்ள பெல்ஐிய நாட்டை சேர்ந்த முன்னாள் அட்லடிகோ மெட்ரிட் மற்றும் செல்சி அணிகளின் கோல் காப்பாளரான, தியாபர்ட் கோர்டியஸ் ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடும் முதல் வாய்ப்பை அவ்வணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் போது பெற்றார்.
ரியல் மெட்ரிட் அணியின் வேகமான பந்து பரிமாற்றத்தின் மூலம் போட்டியின் ஐந்தாம் நிமிடத்தில் அவ்வணி கோலுக்கான முதல் வாய்ப்பை பெற்றது. எனினும், மார்கோ அஸன்ஸியோ மூலம் அவ்வாய்ப்பை சிறந்த முறையில் நிறைவு செய்ய முடியவில்லை.
சொந்த மைதானத் தரப்பின் பின்களத்திலிருந்து எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை டேனீ கர்வஹால் சிறந்ந முறையில் தனது தலையால் முட்டி பெனால்டி எல்லையிலிருந்த க்ரேத் பேலுக்கு வழங்கியதன் மூலம், போட்டியின் 16ஆம் நிமிடத்தில் பேல் முதல் கோலைப் பெற்றார்.
தொடர் தோல்விகளின் பின் யுனைடெட் வெற்றி: வட்போர்ட் அடுத்தடுத்து வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நான்காவது …
எனினும் போட்டியின் 22ஆம் நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பின் போது குய்டோ கெரீல்லோ மூலம் போட்டி சமநிலைப்படுத்தப்பட்டது. தொடராக ரியல் மெட்ரிட் அணி அதிக நேரம் எதிரணியின் பெனால்டி எல்லையிலிருந்து எதிரணிக்கு சவால் விடுத்த போதும் முதல் பாதி நிறைவில் கோல் வித்தியாசத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 1 லெகனேஸ்
இரண்டாம் பாதி ஆரம்பித்து 2 நிமிடங்களிலே அஸன்ஸியோ மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தின் மூலம் கரீம் பென்ஸிமா ரியல் மெட்ரிட் அணிக்கான இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து போட்டியின் 60ஆம் நிமிடத்தில் முன்களத்தில் இடம்பெற்ற வேகமான பந்துப் பரிமாற்றத்தின் இறுதியில், லூகா மொட்ரீச் வழங்கிய பந்தின் மூலம் போட்டியில் தனது இரண்டாவது கோலை கரீம் பென்ஸிமா பெற்றார்.
எதிரணியின் பின்கள வீரரால் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அணித் தலைவரான ஸர்ஜியோ ராமோஸ் 4ஆவது கோலை 65 ஆம் நிமிடத்தில் பெற்றார். ரியல் மெட்ரிட் அணியினரால் இரண்டாம் பாதியில் தொடராக பெறப்பட்ட கோல்களின் மூலம் லெகனேஸ் அணி தோல்வியை தழுவியது.
முழு நேரம்: ரியல் மெட்ரிட் 4 – 1 லெகனேஸ்
பார்சிலோனா எதிர் ஹீஏஸ்கா
இந்தப் பருவகாலத்தில் லா லிகா தொடரில் விளையாடத் தகுதி பெற்ற ஹீஏஸ்கா அணி பார்சிலோனா அணியுடன் நடைபெற்ற இவ்வார போட்டியில் 8-2 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வியுற்றது.
பார்சிலோனா அணிக்கு எதிரான இப்போட்டியில் கோல் நிலையில் வித்தியாசத்தை ஏற்படுத்த ஹீஏஸ்கா அணியின் முன்கள வீரரான 19 வயது நிரம்பிய குய்சோ ஹெர்னான்டேஸிற்கு வெறும் மூன்று நிமிடங்கள் தான் தேவைப்பட்டது.
மன்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கும் ரொனால்டோ
சம்பியன்ஸ் லீக் குழுநிலை அணிகளின் விபரம் இம்முறை …
அதே நிலையில் போட்டியானது 16ஆம் நிமிடத்தில் லியொனல் மெஸ்ஸி மூலம் சமநிலைப்படுத்தப்பட்டது. எதிரணிக்கு சவால் கொடுக்க ஆரம்பித்த பார்சிலோனா அணி 24ஆம் நிமிடத்தில் ஓரு ஓவ்ன் கோலையும், பார்சிலோனா முன்கள வீரர் லுயிஸ் சுவாரேஸ் மூலம் 40ஆம் நிமிடத்தில் ஓரு கோலையும் பெற்றது.
அதேபோல், முதல் பாதியின் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி ஹீஏஸ்கா அணி இரண்டாவது கோலை பெற்றது.
முதல் பாதி: பார்சிலோனா 3 – 2 ஹீஏஸ்கா
முதல் பாதியைப்போல் இரண்டாம் பாதியில் சவால் விடுக்க தவறிய ஹீஏஸ்கா அணிக்கு எதிராக இரண்டாம் பாதியில் மேலதிமாக 5 கோல்களை பார்சிலோனா அணி பெற்றது. சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்ற போதும் போதிய அனுபவமின்மையால் அவற்றை ஹீஏஸ்கா அணி வீரர்களால் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை.
போட்டியின் நிறைவில் மொத்தமாக 31 முறை எதிரணியின் கோல் எல்லைக்கு சவால் விடுத்த பார்சிலோனா அணிக்கு இரண்டாம் பாதியில் ஓஸ்மானே டம்பளே, இவன் ரகடீச், லியொனல் மெஸ்ஸி, ஜோர்டி அல்பா மற்றும் லுயீஸ் சுவாரேஸ் ஆகிய வீரர்களால் மேலதிகமாக ஐந்து கோல்கள் பெறப்பட்டன.
இதனால் ஹீஏஸ்கா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றியீட்டியது.
முழு நேரம்: பார்சிலோனா 8 – 2 ஹீஏஸ்கா
மேலும் சில போட்டி முடிவுகள்
கெடாவெய் 0 – 0 வெலாடோலிட்
ஜிரோனா 1 – 0 விலரல்
ஏய்பர் 2 – 1 ரியல் சொசிடட்
லெவன்டே 2 – 2 வெலன்ஸியா
அலவெஸ் 2 – 2 இஸ்பான்யல்
ரியல் பெடிஸ் 1 – 0 செவில்லா
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…