நியூசிலாந்து T20 அணியில் மீண்டும் கைல் ஜேமிசன்

298

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணங்களுக்கான பலமிக்க நியூசிலாந்து T20 குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த 2 தொடர்களுக்காகவும் டிம் சவுதி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் பெயரிடப்படவில்லை. எனினும், கடந்த ஓராண்டுக்கு மேலாக முதுகுவலி உபாதைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்த அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான கைல் ஜேமிசன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு முன் கைல் ஜேமிசன் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்புவது அந்த அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல, சகலதுறை வீரர் டீன் பொக்ஸ்கிரோப்ட் மற்றும் 20 வயதான லெக்ஸ் சுழல் பந்துவீச்சாளர் ஆதித்ய அசோக் ஆகியோர் முதல் முறையாக நியூசிலாந்து T20i அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

25 வயதான பொக்ஸ்கிரோப்ட் தென்னாபிரிக்காவில் பிறந்து சமீபத்தில் நியூசிலாந்துக்காக விளையாட தகுதி பெற்றார். அவர் நியூசிலாந்து உள்ளூர் போட்டித் தொடரில் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்றதுடன், சுபர் ஸ்மாஷ் T20 தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

இதனிடையே, ஐக்கிய அரபு அராட்ச்சியத்திற்கு எதிரான T20 தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள நியூசிலாந்து அணியில் ஃபின் அலன், டெவோன் கொன்வே, மெட் ஹென்றி, க்ளென் பிலிப்ஸ், ஆடம் மில்னே, டெரில் மிட்செல் மற்றும் இஷ் சோதி ஆகியோர் இடம்பெறவில்லை.

இருப்பினும், அவர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரெட் தொடரில் இணைந்த பிறகு நியூசிலாந்து அணியில் இணைவார்கள். குறிப்பாக, இங்கிலாந்துடனான T20i தொடருக்கு முன் நடைபெறவுள்ள இரண்டு பயிற்சி T20 போட்டிகளில் அவர்கள் அணியுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய திகதிகளில் டுபாயிலும், இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட T20i தொடர் ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.

நியூசிலாந்து T20i குழாம்

ஐக்கிய அரபு இராச்சியம் சுற்றுப்பயணம்

டிம் சவுதி (அணித்தலைவர்), ஆதித்ய அசோக், சாட் போவ்ஸ், மார்க் செப்மேன், டேன் கிளீவர், லொக்கி பெர்குசன், டீன் பொக்ஸ்கிரோப்ட், கைல் ஜேமிசன், கோல் மெக்கன்சி, ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர், டிம் ஷிபர்ட், ஹென்ரி ஷிபர்ட், ஹென்றி சிப்லி, வில் யங்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

டிம் சவுதி (அணித்தலைவர்), ஃபின் அலன், மார்க் செப்மேன், டெவோன் கொன்வே, லொக்கி பெர்குசன், மெட் ஹென்றி, கைல் ஜேமிசன், அடம் மில்னே, டெரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர், டிம் ஷிபர்ட், இஷ் சோதி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<