இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் ஐ.சி.சி இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 20 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இதில் இங்கிலாந்து 3-0 என இலங்கையை வைட் வொஷ் செய்தது.
நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்
இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் ஐ.சி.சி இன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 28 ஆவது இடத்தில் இருந்த குசல் மெண்டிஸ், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 178 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன்படி, டெஸ்ட் வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலில் 627 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், 8 இடங்கள் முன்னேறி 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனிடையே, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 256 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து 7 ஆவது இடத்திலும், இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 11 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இதேநேரம், இலங்கையுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற ஜோனி பெயார்ஸ்டேவ் டெஸ்ட் தரவரிசையில் 22 ஆவது இடத்திலிருந்து 6 இடங்களக் முன்னேற்றம் கண்டு 16 ஆவது இடத்தைப் பெற்றுக் கொள்ள, இத்தொடரில் 250 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட ஜோஸ் பட்லர் 18 ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
இதேநேரம், இலங்கை – இங்கிலாந்து தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்து (277 ஓட்டங்கள்) தொடர் நாயகன் விருது வென்ற பென் போக்ஸ் டெஸ்ட் தரவரிசையில் முதல் 50 வீரர்களுக்குள் இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இது இவ்வாறிருக்க, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 9 இடங்களில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 2 ஆவது இடத்திலும் (910 புள்ளிகள்), நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 3 ஆவது இடத்திலும் (876 புள்ளிகள்), இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 4 ஆவது இடத்திலும் (807 புள்ளிகள்), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை உத்தேச அணி
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. போட்டியை தவற விட்டதன் மூலம் அவரது ஒட்டு மொத்த புள்ளிகளில் இருந்து ஒரு சதவீத புள்ளி குறைந்தது. இதன்படி 9 புள்ளிகளை இழந்துள்ள அண்டர்சன் 2 ஆவது இடத்துக்கு (874 புள்ளிகள்) பின் தள்ளப்பட்டுள்ளார். தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா (882 புள்ளிகள்) மறுபடியும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 3, 4, 5 ஆவது இடங்களில் முறையே பாகிஸ்தானின் மொஹமட் அப்பாஸ் (829 புள்ளிகள்), தென்னாபிரிக்காவின் வெரோன் பிலாண்டர் (826 புள்ளிகள்), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (812 புள்ளிகள்) ஆகியோர் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்தும், 2 ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது.
2 ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரான யாசிர் ஷாஹ் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களையும், 2 ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி ஒட்டுமொத்தமாக 14 விக்கெட்டுக்களை சாய்த்தார். இதனால் இவர் 19 ஆவது இடத்தில் இருந்து 10 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க