விஸ்டன் சஞ்சிகையின் 25 வயதுக்குட்பட்ட உலக பதினொருவர் அணியில் குசல் மெண்டிஸ்

894

கிரிக்கெட் விளையாட்டின் பைபிளாக கருதப்படும், விஸ்டன் சஞ்சிகை 25 வயதுக்குட்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர்களை மாத்திரம் உள்ளடக்கி, தமது உலக டெஸ்ட் பதினொருவர் அணியினை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் முகம்சுழிக்க வைக்கும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள்

அந்தவகையில், இந்த டெஸ்ட் பதினொருவர் அணியில் இடம்பிடித்த ஒரே இலங்கை வீரராக இலங்கை அணியின் இளம் துடுப்பாட்டவீரரான குசல் மெண்டிஸ் மாறியிருக்கின்றார்.

விஸ்டன் சஞ்சிகை 2020ஆம் ஆண்டினுடைய ஜூலை மாதத்தின் 17ஆம் திகதியை அடிப்படையாக கொண்டு உலக பதினொருவர் அணிக்கான வீரர் தெரிவினை மேற்கொண்டிருக்கின்றது. அதன்படி, குறித்த திகதியில் தமது 25ஆவது வயதில் இருக்கும் வீரர்களும், அதற்கு குறைவான வயதினை உடைய வீரர்களும் உலக பதினொருவர் அணியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேநேரம், இந்த உலக பதினொருவர் அணியின் தலைவராக பாகிஸ்தான் அணியின் தலைவரான பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 

மொத்தமாக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பாபர் அசாம், 45.12 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 1,850 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், 2018ஆம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவரின் டெஸ்ட் சராசரி 65.47 ஆகவும் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய வேகப்பந்துவீச்சாளரான சஹீன் சாஹ் அப்ரிடியும், இந்த உலகப் பதினொருவர் அணியில் உள்ளடக்கப்பட்ட மற்றைய பாகிஸ்தான் வீரராக காணப்படுவதோடு,  இந்த குழாத்தில் உள்ளடக்கப்பட்ட மிக இளவயது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை சார்பில், இந்த உலக பதினொருவர் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸ் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு 36.97 என்கிற துடுப்பாட்ட சராசரியினையும் கொண்டிருக்கின்றார். அதேநேரம், குசல் மெண்டிஸ் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக வெளிப்படுத்திய சிறப்பாட்டங்களையும் கருத்திற்கொண்டே அவருக்கு இந்த பதினொருவர் அணியில் வாய்ப்பபு வழங்கப்பட்டிருக்கின்றது.

இனவெறி துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிட்டுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்

மறுமுனையில் விக்கெட்காப்பு துடுப்பட்டவீரராக இருக்கும் ரிஷாப் பான்ட், இந்த உலக பதினொருவர் அணியில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரராக காணப்பட, ஆப்கானிஸ்தான் நட்சத்திர மணிக்கட்டு சுழல்வீரர் ரஷீட் கான் இந்த பதினொருவர் அணியில் இடம்பெற்ற ஏனைய ஆசிய நாட்டு வீரராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தென்னாபிரிக்க அணி வீரர்களான எய்டன் மார்க்ரம், ககிஸோ றபாடா ஆகியோரும் இந்த பதினொருவர் அணியில் இடம்பெற்றிருக்க, இங்கிலாந்து அணியின் வீரர்களான டோம் சிப்லி, ஒல்லி போப், சேம் கர்ரன் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த குழாத்தில் இடம்பெற்று, இந்த குழாத்தில் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற வீரர்களாக காணப்படுகின்றனர். 

ஆனால் விஸ்டனின் இந்த உலக பதினொருவர் குழாத்தில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய  தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எந்த வீரர்களும் இடம்பெறவில்லை. 

விஸ்டன் உலக பதினொருவர் அணி 

  • எய்டன் மார்க்கரம் – தென்னாபிரிக்கா – வயது 25
  • டோம் சிப்லி – இங்கிலாந்து – வயது 24
  • குசல் மெண்டிஸ் – இலங்கை – வயது 25
  • பாபர் அசாம் – பாகிஸ்தான் – வயது 25 (அணித்தலைவர்)
  • ஒல்லி போப் – இங்கிலாந்து – வயது 22
  • றிசாப் பான்ட் – இந்தியா – வயது 22 (விக்கெட்காப்பாளர்)
  • சேம் கர்ரன் – இங்கிலாந்து – வயது 22 
  • றஷீட் கான் – ஆப்கானிஸ்தான் – வயது 21
  • ஜொப்ரா ஆர்ச்சர் – இங்கிலாந்து – வயது 25
  • ககிஸோ றபாடா – தென்னாபிரிக்கா – வயது 25
  • சஹீன் சாஹ் அப்ரிடி – பாகிஸ்தான் – வயது 20 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…