இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் – சங்கக்கார

Indian Premier League 2023

504
Kumar Sangakkara

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியைச் சேர்ந்த ரியான் பராக் உள்ளிட்ட இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

நடப்பு IPL கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டியானது நேற்றுமுன்தினம் (20) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றதுடன், இந்தப்போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியானது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே குவித்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து பின்வரிசையில் களமிறங்கிய அனைவருமே வந்த வேகத்தில் நடையை கட்டியது அந்த அணிக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக இளம் வீரர் ரியான் பராக் எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடாத வேளையில் அவருக்காக தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்க்கார கலந்துகொண்டு தோல்வி குறித்து கருத்து வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், இந்தப்போட்டியில் எமது அணி வெற்றியிலக்கை துரத்தும் போது வேகமாக ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்திருந்தாலும் மத்திய வரிசையில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் தோல்வியை சந்தித்ததில் கவலையளிக்கிறது.

லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதே போன்று இந்தப்போட்டியில் எங்களுடைய துடுப்பாட்டம் நன்றாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர்களை விளாச வேண்டும் இதுதான் நாங்கள் வீரர்களுக்கு வகுத்துள்ள திட்டம் என்றார்.

ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரியான் பராக் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். திறமையான வீரரான இவர் ராஜஸ்தான் அணிக்காக கடந்த 5 ஆண்டுகளாக அந்த அணியில் தொடர்ந்து நீடித்து வருவதுடன், கடந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் ஒரு சில போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

இதனிடையே, இந்த ஆண்டு ரஞ்சி கிண்ணம் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்ததால் இந்த ஆண்டு IPL தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இதுவரை நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அவர் ஏமாற்றம் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு IPL தொடரில் இதுவரை 53 ஓட்டங்களை மட்டுமே குவித்துள்ளார்.

இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற லக்னோ அணியுடனான போட்டியின் போதும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. வேகமாக ஓட்டங்களை எடுக்க வேண்டிய கட்டத்தில் 12 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. இதுகுறித்து போட்டிக்கு பின் பேசிய குமார் சங்கக்கார,

அவர் துரதிஷ்டவசமாக தற்போது நல்ல போர்மில் இல்லை. ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே துடுப்பெடுத்தாடுகிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார். இந்த சிக்கலை அடையாளம் கண்டு விரைவில் அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். அவர் தற்போது நல்ல போர்மில் இல்லை என்றாலும் இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் அதுதான் அவருக்காக நாங்கள் வகுத்துள்ள திட்டம் என குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<