இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் சர்ரேய் அணிக்காக தான் விளையாடியிருந்த உள்ளூர் முதல்தர ஒரு நாள் போட்டியில் சதம் பெற்றதன் மூலம் முதல்தர மற்றும் முதல்தர ஒரு நாள் (List A) போட்டிகளில் 100ஆவது சதத்தினை பதிவு செய்து புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
தற்பொழுது 39 வயதாகும் குமார் சங்கக்கார சர்ரேய் அணிக்காக சிறந்த முறையில் பிரகாசித்து வருகின்றார். இந்நிலையில், யோர்க்ஷயர் அணிக்கெதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற லண்டன் றோயல் கிண்ணத் தொடருக்கான போட்டியில் அவர் 121 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலமே அவர் தனது 100ஆவது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார்.
சங்கக்காரவின் இந்த 100ஆவது சதத்தின் உதவியுடன், நேற்றைய போட்டியில் சர்ரேய் அணி 24 ஓட்டங்களால் யோர்க்ஷயர் அணியினை வீழ்த்தியதுடன், தொடரின் அரையிறுதிப் போட்டிற்கும் தெரிவாகியுள்ளது.
இது சங்கா முதல்தர ஒருநாள் போட்டிகள் பெற்றுக்கொண்ட 39ஆவது சதமாகும். அதேபோன்று, அவரால் முதல்தர போட்டிகளில் 61 சதங்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் தோல்வி, அடுத்த கட்டம் குறித்த மெதிவ்சின் கருத்து
நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான..
இடது கை துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, இதுவரையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 45,529 ஓட்டங்களினை குவித்திருக்கின்றார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வினை அறிவித்திருந்த அவர் இங்கிலாந்தில் இடம்பெறும் இந்த பருவகாலப் போட்டிகளைத் தொடர்ந்து முதல்தரப் போட்டிகளிலிருந்தும் முழுமையான ஓய்வினைப் பெறப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த மாத இறுதியில், குமார் சங்கக்கார முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியான தனது ஆறாவது சதத்தினை பூர்த்தி செய்து சாதனை ஒன்றினை பதிவு செய்ய இருந்தும், அதனை அவர் வெறும் 16 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சங்கா, இதுவரையில் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 12,400 ஓட்டங்களினை குவித்துள்ளதோடு, 404 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 14,234 ஓட்டங்களினைப் பெற்றுள்ளார். அதேபோன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 25 சதங்களையும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல்தர மற்றும் முதல்தர ஒரு நாள் (List A) போட்டிகளில் 100ஆவது சதத்தினை பதிவு செய்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமை சங்கக்காரவையே சாரும்.