பாகிஸ்தான் லாஹூர் நகரில் நேற்று (19) நடைபெற்ற முல்டான் சுல்டான்ஸ் மற்றும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இடையிலான கண்காட்சி T20 போட்டியில், மெரில்போன் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.
சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தான் மண்ணுக்கு மீண்டும் கொண்டுவரும் நோக்குடன் பாகிஸ்தான் சென்றுள்ள, குமார் சங்கக்கார தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அங்கே மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது.
இலங்கை ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா
மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் ………
அந்தவகையில், மெரில்போன் கிரிக்கெட் கழக வீரர்கள் அவர்களின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இறுதியாக விளையாடும் போட்டியாக, சஹீட் அப்ரிடியின் PSL அணியான முல்டான் சுல்டான்ஸ் உடனான T20 போட்டி அமைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மெரில்போன் கிரிக்கெட் கழகத் தலைவர் குமார் சங்கக்கார, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.
குமார் சங்கக்காரவின் முடிவுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய மெரில்போன் கிரிக்கெட் கழக அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற தவறினாலும், அணித்தலைவர் குமார் சங்கக்கார, மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரவி போபரா ஆகியோர் அதிரடி கலந்த பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து இந்த இரண்டு வீரர்களும் அரைச்சதம் விளாச மெரில்போன் கிரிக்கெட் கழக அணியினர் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
மெரில்போன் கிரிக்கெட் கழகம் சார்பான துடுப்பாட்டத்தில் ரவி போபரா ஆட்டமிழக்காது 37 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் பெற, குமார் சங்கக்கார 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பெளண்டரிகள் உடன் 52 ஓட்டங்களை எடுத்தார்.
இதேநேரம், முல்டான் சுல்டான்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அலி சபீக் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹமட் இல்யாஸ், ஜூனைட் கான் ஆகியோர் தங்களிடையே தலா ஒரு விக்கெட் வீதம் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 185 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய முல்டான் சுல்டான்ஸ் அணியினர் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவினர்.
முல்டான் சுல்டான்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக குஸ்தீல் ஷாஹ், போராட்டமான ஆட்டம் காண்பித்து 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதேநேரம், மெரில்போன் கிரிக்கெட் கழகத்தினுடைய பந்துவீச்சு சார்பாக இடதுகை சுழல் வீரரான இம்ரான் கையூம் வெறும் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ப்ரட் கிளாஸ்ஸன் 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் குமார் சங்கக்காரவின் மெரில்போன் கிரிக்கெட் கழகம் தமது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை, இரண்டு வெற்றிகளுடனும், இரண்டு தோல்விகளுடனும் நிறைவு செய்து கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
மெரில்போன் கிரிக்கெட் கழகம் – 184/4 (20) – ரவி போபரா 70(37), குமார் சங்கக்கார 52(35), அலி சபீக் 21/2(3)
முல்டான் சுல்டான்ஸ் – 112 (17.4) – குஸ்தில் ஷாஹ் 45(26), இம்ரான் கையூம் 9/4(4), ப்ரெட் கிளாஸ்ஸன் 41/2(4)
முடிவு – மெரில்போன் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<