2011 உலகக் கிண்ண நாணய சுழற்சியில் ஏற்பட்ட குழப்பம்

253

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் டோனி கேட்டுக்கொண்டதால் தான் இரண்டு தடவைகள் நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இன்ஸ்டர்கிராம் நேரலை நிகழ்ச்சியில் குமார் சங்கக்கார (28) பங்குகொண்டார்.  

>> கிரிக்கெட்டின் சாதனை பொக்கிஷம் குமார் சங்கக்கார

இதில் 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற சுவாரஷ்ய விடயங்கள் தொடர்பில் அஷ்வினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு குமார் சங்கக்கார பதிலளிக்கையில்,

”மும்பையில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இது போல இலங்கையில் ஒரு முறை கூட நிகழ்ந்தது இல்லை. ஆனால் அந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்துள்ளேன்.  

அந்த இறுதிப் போட்டியின் போது நான் நாணய சுழற்சியைக் கேட்டது டோனிக்கு கேட்கவில்லை. அதன் பிறகு என்னிடம் வந்து நீங்கள் டெயில் தானே கேட்டீர்கள் என்றார். அதற்கு இல்லை நான் ஹெட்ஸ் கேட்டேன் என்றேன்

போட்டி மத்தியஸ்தர் நான் நாணய சுழற்சியில் வென்றதாக கூறினார். ஆனால் டோனி மறுப்பு தெரிவித்தார். அதனால் கொஞ்சம் குழப்பம் நிலவியது

அதன்பின் டோனி மீண்டும் ஒரு தடவை நாணய சுழற்சியை மேற்கொள்ளலாம்  என்றார். அதற்கு பின் தான் இரண்டாவது முறையாக நாணய சுழற்சி போடப்பட்டது. ஆனால், அது அதிஷ்டமா என்ன என்பது தெரியவில்லை. நான் தான் இரண்டாவது தடவையாகவும் நாணய சுழற்சியில் வென்றேன்.

ஒருவேளை இந்திய அணி நாணய சுழற்சியை வென்றிருந்தால், நிச்சயமாக துடுப்பாட்டம் செய்திருக்கும்” என தெரிவித்தார்

இதனிடையே உலகக் கிண்ண தோல்வி குறித்து சங்கக்கார கருத்து தெரிவிக்கையில்

”நாங்கள் வென்றாலும், தோற்றாலும் இரண்டையும் சமநிலையாக எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரியும். அந்த சோகத்துக்கு பின் சிறு புன்னகை மறைந்திருந்தது

இலங்கை மக்களை நினைத்த போது ஏமாற்றமாக இருந்தது. 1996க்கு பின் மீண்டும் உலகக் கிண்ணத்துக்காக காத்திருந்த அவர்களை நினைத்த போது வருத்தமாகவும் இருந்தது

2007, மற்றும் 2011 என இருமுறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நழுவிப் போனது. மேலும் டி-20 உலகக் கிண்ணத்திலும் 2009 மற்றும் 2012 இல் வாய்ப்பை நழுவ விட்டோம்.

உண்மையில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் முழு உடற்தகுதியுடன் விளையாடியிருந்தால் 100 சதவீதம் சேஸிங் தான் தேர்வு செய்திருப்போம். இது போட்டியின் முடிவை மாற்றியிருந்திருக்குமா என்பது எனக்கு தெரியாது.  

ஆனால் அணியின் சமநிலை சரியாக இருந்திருக்கும். ஏழாவது இடத்தில் மெதிவ்ஸ் களமிறங்கியிருந்தால் நிச்சயம் அது இலங்கை அணிக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்” என அவர் தெரிவித்தார்

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<