சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது.
தற்போதைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPL போட்டிகளுக்கு தகுதியானவர்கள் அல்ல : முரளிதரன்
எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து சார்பாக இயன் பெல்லும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா சார்பாக முறையே ஷேன் போண்ட், மைக் ஹஸ்ஸி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் விஷேட தூதுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான சம்பியன் கிண்ணத்தின் முதலாவது போட்டி நடைபெற சரியாக 50 தினங்களுக்கு முன்னர் முன்னணி வீரர்கள் அடங்கிய இந்த பெயர் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இத்தொடரிற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் தம்மிடையே 1774 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு, 48 சதங்களுடன் தம்மிடையே மொத்தமாக 51,906 ஓட்டங்களினையும் குவித்து 838 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டேவிட் றிச்சர்ட்சன் தூதுவர்கள் தொடர்பாக பேசும் போது,
“ சம்பியன் கிண்ணத்தொடர் ஆரம்பாக 50 நாட்களின் முன்னர் தலைசிறந்த வீரர்கள் குழாமொன்றினை சம்பியன் கிண்ணத்திற்கான விஷேட தூதுவர்களாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எமது இந்த நிகழ்ச்சித்திட்டம் மூலம் முன்னோடி வீரர்களான இவர்கள் இடையிலும் புதிய தலைமுறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடையில் இணைப்பு பாலம் ஒன்று உருவாகும் என நம்புகின்றோம். இன்னும் கிரிக்கெட்டினை மேலும் சிறந்ததாக மாற்றக்கூடிய வாய்ப்பும் உருவாகும் “ என்றார்.
அத்துடன்,
“ தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த குழாம், ஐ.சி.சி இன் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக சம்பியன் கிண்ணத்தில் நடைபெற இருக்கும் 15 போட்டிகள் பற்றிய தமது கருத்துக்களையும், போட்டிகள் பற்றிய தமது அனுபவ ரீதியிலான கண்ணோட்டங்களினையும் வழங்கும். இவை அனைத்தையும் நிச்சயமாக நாம் விரும்பி வாசிப்போம் “ என்றும் றிச்சர்ட்சன் தெரிவித்திருந்தார்.
சம்பியன் கிண்ணத் தொடரில், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் பங்கேற்றிருக்கும் குமார் சங்கக்கார தனது கருத்தினை வெளியிட்டிருந்த போது,
“ இத்தொடரின் விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதையும், போட்டிகள் பற்றிய ஆய்வாளராய் செயற்படப்போவதையும் கெளரவமாகக் கருதுகின்றேன். அத்துடன் இந்த வாய்ப்பு எனக்கு கிட்டியமைக்காக சந்தோசமும் அடைகின்றேன். நான் பங்கேற்று ரசித்து விளையாடியிருந்த தொடரொன்றிற்காக நெருங்கி வேலை செய்வதிலும் மகிழ்ச்சி கொள்கின்றேன். அத்துடன் இத்தொடரிற்காக எனது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கவும் எதிர்பார்த்துள்ளேன் “ என்றார்.
மேலும்,“ இலங்கை இத்தொடரில் எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் இளம் அணி. இத்தொடரினை இதே நிலமைகளுடன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து 2019இல் நடைபெற இருக்கும் ஐ.சி.சி உலகக் கிண்ணத்திற்காக சரியான வாய்ப்பாக எம் நாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் உறுதியோடு இருக்கின்றேன். “
என்று குமார் சங்கக்கார சம்பியன் கிண்ணத்தில் இலங்கை அணி பற்றிய தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.