ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வுக்கு சங்கக்காரவுக்கு அழைப்பு

337

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவை இந்திய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவ்ரவ் கங்குலி இவ் அழைப்பை விடுத்துள்ளதுடன், இதற்கு சங்கக்கார சாதகமான பதிலை வழங்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நான் சங்கக்காரவுடன் தொலைபேசிவாயிலாக கதைத்தேன். அதன்போது இவ்விசேட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுடன், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தார். எனவே இதற்கான திகதியை அறிவிக்க எதிர்பார்த்துள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பாரிய சேவையை வழங்கிய ஜக்மோகன் டால்மியா, 2015ஆம் ஆண்டு தனது 75ஆவது வயதில் காலமானார். அவரது சேவையை பாராட்டி விசேட நினைவுதின நிகழ்வொன்றை நடத்துவதற்கு கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சி செய்த போதிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவ்வாறான நிகழ்வொன்றை நடத்த முடியாமல் போனது. முன்னதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய – நியூசிலாந்து தொடர் மற்றும் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இந்திய – இங்கிலாந்து தொடரின் போதும் இவ்விசேட நினைவுதின நிகழ்வை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் விபரம்

இந்நிலையில் கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவராகவுள்ள சவ்ரவ் கங்குலியின் முயற்சியினால் குறித்த நினைவுதின நிகழ்வை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன் இந்நிகழ்வை நடத்துவதற்கு கொல்கத்தா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வு பெற்றாலும், தற்போது உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற டி20 லீக் போட்டிகளில் அதிரடி காட்டி வருகின்ற நிலையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் ஒழுங்கு விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் மெல்பர்ன் கிரிக்கெட் சங்கத்தினதால் நடத்தப்பட்ட வருடாந்த கூட்டத்தில் விளையாட்டின் நற்பண்புகள் என்ற தலைப்பில் சங்கக்கார உரையாற்றியிருந்தார். இதன்போது இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பம், 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி முதற் தடவையாக சம்பியன் பட்டம் வென்றமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் 2009ஆம் ஆண்டு இலங்கை அணி மீது லாஹூரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் அவர் உரையாற்றி உலகின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.