ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.
ஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர். அவர்களில் இலங்கை வீரர் சங்கக்கார தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சோபித்தமை குறிப்பிடத்தக்கது.
>> டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) மொங் கொக்கில் நடந்த இறுதிப் போட்டியில் சங்கக்காரவின் கெலக்சி கிளடியேட்டர்ஸ், மேற்கிந்திய தீவுகள் முன்னாள் தலைவர் டெரன் சமி இடம்பிடித்த ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியை எதிர்கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சங்கக்கார எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார். இதன்படி களமிறங்கிய ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர் நிசகத் கான் 52 பந்துகளில் 93 ஓட்டங்களை விளாசினார். தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஜெஹான் போதா மத்திய வரிசையில் 36 ஓட்டங்களை விளாசினார்.
இதன்மூலம் ஜகுவார்ஸ் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை குவித்தது. கெலக்சி கிளடியேட்டர்ஸ் அணிக்காக இம்ரான் ஆரிப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கெலக்சி கிளடியேட்டர்ஸ் அணிக்கு சங்கக்கார மற்றும் பலால் முஹமது அதிரடி ஆரம்பம் தந்தனர். இருவரும் 64 பந்துகளில் 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். பலால் முஹமது 33 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த போதும் சங்கக்கார அணியை வெற்றி பெறச் செய்ய தனது அதரடி ஆட்டத்தை தொடர்ந்தார். எனினும் 47 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்களை எடுத்த சங்கக்கார ஆட்டமிழந்த பின் அவ்வணி தடுமாற்றத்தை சந்தித்தது.
>> ICC டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்ட ரொஷேன், அகில
பின்னர் தேவைப்படும் ஓட்ட வேகத்திற்கு ஏற்ப மத்திய வரிசை வீரர்களால் துடுப்பெடுத்தாட முடியாமல் போனது. இதன்போது நியூசிலாந்து முன்னாள் சகலதுறை வீரர் ஜேம்ஸ் பிரான்க்லின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசியபோதும் அது போட்டியில் வெற்றிபெற போதுமாக இருக்கவில்லை.
இறுதியில் கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் நடத்தப்பட்ட இந்த தொடரில் சங்கக்கார ஐந்து போட்டிகளிலும் 311 ஓட்டங்களை பெற்று தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக உள்ளார். குறிப்பாக அவர் இறுதிப் போட்டி உட்பட கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் அரைச்சதம் விளாசினார். சிட்டி கைடக் அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை (10) நடந்த போட்டியில் சங்கக்கார ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.
தொடரில் எந்த ஒரு வீரரை விடவும் அவர் அதிகப்படியாக 24 பௌண்ரிகள் மற்றும் 21 சிக்ஸர்களை விளாசியதோடு அவரது ஓட்ட வேகம் 173 ஆக இருந்தது.
போட்டிக்குப் பின்னர் சங்கக்கார கூறியதாவது, “சிறப்பாக இருந்தது. அதிகம் மகிழ்ச்சி அடைந்ததோடு, வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஐந்து நாட்களில் ஐந்து போட்டிகள் என்ற போட்டி அட்டவணை சற்று சிக்கலானது. குறுகிய போட்டி தொடர்கள் சிறந்தது என்றாலும் வீரர்களுக்கு ஓய்வெடுக்க ஒருசில தினங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்கார அது தொடக்கம் உலகெங்கும் நடக்கும் உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் அடுத்து பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முல்தான் சுல்தான் அணிக்காக ஆடவுள்ளார். இந்த போட்டிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.