இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் ஆடிய இலங்கை அணியிடம் திறமை இருந்த போதிலும், அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை என முன்னாள் இலங்கை அணி வீரரும், தற்போதைய ஐசிசி நடுவருமான குமார் தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதேபோல T20 உலகக் கிண்ணத் தொடருக்கு போதுமான அளவு திட்டங்கள் இன்றி களமிறங்கியது தான் இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் பிரதான கள நடுவர்களில் ஒருவராக குமார் தர்மசேன பணியாற்றியிருந்தார்.
T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையர் இருவர் முக்கிய கடமையில்
எனவே, உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் ஐசிசியின் பிரதான நடுவராக பணியாற்றி இலங்கைக்கு மகத்தான மரியாதையையும் புகழையும் பெற்றுத் தந்த குமார் தர்மசேனவை வரவேற்கும் வைபவம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நடைபெற்றது. இதன்போது இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் செயல்பாடு மற்றும் வீரர்களின் திறமை குறித்து ஊடகவியாலளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
“இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் ஆடிய இலங்கை அணி மிகச் சிறந்த அணிகளில் ஒன்று. சர்வதேச மட்டத்தில் விளையாடும் போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும். அதேபோல, உலகக் கிண்ணத்துக்கு முன் எம்மை நாங்கள் சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு மாதகால இடைவெளியில் அவுஸ்திரேலியா போன்ற நாட்டில் உலகக் கிண்ணத் தொடரை வைத்துக்கொண்டு தயாராக முடியாது. திட்டமொன்று வகுப்பட்டிருக்க வேண்டும். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விளையாடும் விதம் குறித்து திட்டமிட வேண்டும். அதற்குத் தான் பயிற்சியாளர்களும், முகாமையாளர்களும், கிரிக்கெட் சபையும் உள்ளது. எனவே அவர்கள் அதை செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.
எனினும், ஒருசில காரணங்களால் இலங்கை அணிக்கு இம்முறை T20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. எவ்வாறாயினும், இதனை சிறந்த அனுபவமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் எமது வீரர்கள் சிறப்பாக விiயாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நடுவராக இலங்கை அணியை அவதானித்ததை வைத்து தற்போது இலங்கை அணியில் உள்ள வீரர்கள் திறமையானவர்கள். மிகவும் சிறந்த நிலையில் உள்ளார்கள். உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கும் அதிஷ்டம் இருக்க வேண்டும். அதற்கு சிறந்த உதாரணமாக பாகிஸ்தான் அணியை குறிப்பிடலாம்.
எமது அணியின் திறமை எவ்வாறு இருந்தாலும், அரையிறுதியில் விளையாடுகின்ற அதிஷ்டம் எமக்கு கிடைக்கவில்லை என்பதை தனிப்பட்ட ரீதியில் என்னால் உணர முடிந்தது.
எனவே, நான் சுட்டிக்காட்டிய விடயங்களை திருத்திக் கொண்டால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு எம்மால் தகுதி பெற முடியும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து” என தெரிவித்தார்.
இதனிடையே, T20 உலகக் கிண்ணத் தொடருக்கு திட்டங்கள் இன்றி களமிறங்கியதால் தான் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதா என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.
“எமது அணியில் திட்டமொன்று இருந்தது. திட்டமின்றி ஒருபோதும் விளையாட மாட்டார்கள். ஆனால் அது மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது என்று கூற முடியாது. எதிரணிகள் பெரும்பாலும் திட்டங்களை வகுத்துக் கொண்டு தான் இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் களமிறங்கும். எமது அணியின் திட்டங்கள் தோல்வியடைய சில காரணங்கள் உண்டு. பல வீரர்கள் உபாதைகளுக்குள்ளாகி அணியிலிருந்து வெளியேறினார்கள். இவ்வாறான சம்பவங்களால் அணியை சமபலத்துடன் தக்கவைத்துக் கொண்டு விளையாடுவது கடினம். இவ்வாறான காரணங்களால் இலங்கை அணியால் இறுதிக் கட்ட எதிர்பார்ப்பை அடைய முடியவில்லை” என தெரிவித்தார்.
இதேவேளை, குமார் தர்மசேன விளையாடிய காலம் மற்றும் தற்போதைய காலத்தில் விளையாடுகின்ற கிரிக்கெட்டுக்கும் உள்ள வித்தியாசம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,
“1999ஆம் ஆண்டில் விளையாடிய கிரிக்கெட்டையும், 2022ஆம் ஆண்டில் விளையாடிய கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். 1999இல் விளையாடிய கிரிக்கெட்டும் தற்போதைய கிரிக்கெட்டும் முற்றிலும் வித்தியாசமானது. தற்போது தொழில்நுட்பத்துடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
நாங்கள் அந்தக் காலத்தில் ஆடியது போல தற்போது கிரிக்கெட் விளையாடினால் முதல் சுற்றுடன் தான் வெளியேற வேண்டி ஏற்படும். எனவே அந்தக் காலத்துடன் தற்போதைய கிரிக்கெட்டை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு, தொழில்நுட்பத்துக்கு ஏற்ப எமது வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். அதனை இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக எம்மால் வர முடியும்” என குறிப்பிட்டார்.
ஐசிசியின் இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“ஐசிசி தொடரொன்றின் இறுதிப் போட்டியில் நான் கள நடுவராகப் பணியாற்றிய 7ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். அதேபோல, உலகக் கிண்ணத் தொடரில் 5ஆவது தடவையாக கள நடுவராகப் பணியாற்றினேன். இதன்மூலம் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுக்க கிடைத்தமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் இன்னும் 8 ஆண்டுகளுக்கு ஐசிசியின் நடுவராகப் பணியாற்ற முடியும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்;று பார்ப்போம்” என்று தெரிவித்தார்.