இலங்கையில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களும் எதிர்பார்த்த ஒரு போட்டியான 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான கொத்மலே கிண்ணத்திற்கான இரண்டாவது அரையிறுதியில் நடப்புச் சம்பியன் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை பெனால்டி முறையில் வீழ்த்திய கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி கிண்ணத்திற்கான இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டி அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியாக அமைந்தது.
இலங்கையின் கால்பந்து ஜாம்பவான் நாம் என்று கூறிக்கொள்ளும் இந்த இரண்டு பாடசாலை அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் இருந்தது.
பின்னர் இரண்டாவது பாதியில் போட்டி நிறைவடைவதற்கு 10 நிமிடங்களையும் விடவும் குறைவான நேரம் இருந்த நிலையில் ஹென்ரியரசர் கல்லூரி அணி தமக்கான இரண்டாவது கோலைப் பெற, அரங்கு முழுவதும் இருந்த யாழ் பார்வையாளர்கள் போட்டி நிறைவடைவதற்கு முன்னரே வெற்றியைக் கொண்டாடினர்.
எனினும் போட்டி நிறைவு பெற இருந்த இறுதி நேரத்தில் ஸாஹிரா அணிக்கு வழங்கப்பட்ட இலவச உதையின் மூலம் போட்டியை சமப்படுத்துவதற்கான கோலை அவ்வணி பெற்றது.
எனவே போட்டி 2-2 என்ற சமநிலையில் நிறைவுபெற, வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்போது ஸாஹிரா கல்லூரி அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை வெற்றி கொண்டது.
இதன்மூலம் சனிக்கழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி மற்றொரு யாழ் அணியான புனித பத்திரிசியார் கல்லூரி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.