டெஸ்ட் அணித்தலைவர் பதவியினை துறக்கும் விராட் கோலி

424

இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான விராட் கோலி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது தலைவர் பதவியினை துறப்பதாக அறிவித்திருக்கின்றார்.

விராட் கோலியின் அறிவிப்பானது இந்திய அணி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை 2-1 என பறிகொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் வெளியாகியிருககின்றது.

>>2022ஆம் ஆண்டின் முதல் சவாலினை சமாளிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி??

நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து T20i போட்டிகளில் இந்திய அணித்தலைவர் பதவியினை துறந்த விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்தும் அண்மையில் நீக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இந்திய அணியின் தலைவர் பதவியினை துறக்கும் செய்தியானது தற்போது வெளியாகியிருப்பதோடு, இந்த பதவி துறப்புடன் கோலி அனைத்துவகைப் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய அணியின் தலைவர் பதவியினை துறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அணித்தலைவர் பதவியினை துறப்பதனை உறுதி செய்திருக்கும் விராட் கோலி, தான் அணித்தலைவராக இருந்த போது தனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியினை முதல் தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் வழிநடாத்தியிருந்த விராட் கோலி, மஹேந்திர சிங் டோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த பின்னர் இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர தலைவராக மாறியிருந்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் மிகச் சிறந்த தலைவராக கருதப்படும் விராட் கோலி தான் வழிநடாத்திய 68 போட்டிகளில் 40 போட்டிகளில் இந்திய அணியினை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றிருப்பதோடு, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணித்தலைவர்கள் தரவரிசையிலும் நான்காம் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>ஓய்வு அறிவிப்பை மீளப் பெற்றார் பானுக்க ராஜபக்ஷ

இதேவேளை இந்திய அணி, விராட் கோலியின் தலைமையில் அவுஸ்திரேலிய மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்ற ஆசிய அணியாக வரலாறு படைத்திருந்ததுடன், முதல் முறையாக நடைபெற்ற ஐ.சி.சி. டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<