ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு; இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா

761

இந்த மாத நடுப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இந்திய குழாம் இன்று (1) அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய குழாமில் இந்திய கிரிக்கெட் அணியின் வழமையான தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராத் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், ஆசிய கிண்ணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக  ரோஹித் சர்மா செயற்படவிருக்கின்றார்.

கோஹ்லிக்கு ஓய்வு வழங்கியது பற்றி கருத்து தெரிவித்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான MSK பிரசாத், “அவர் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருகின்றார். எனவே, அவரது (கோஹ்லியின்) பணிச்சுமையினை கருத்திற் கொண்டு ஓய்வினை வழங்கியிருக்கின்றோம்“ எனக் கூறியிருந்தார்.

ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள்

ஆசிய கிண்ண இந்திய குழாமில் அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கின்ற இதே நேரத்தில், அண்மைய இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சார்பில் ஆடியிருந்த சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கெளல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் மனீஷ் பாண்டே நான்கு அணிகள் பங்குபற்றியிருந்த அண்மைய ஒரு நாள் தொடரில் இந்தியாவின் B   அணிக்காக ஆடி சிறந்த பதிவுகளை காட்டியிருந்தார். கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு போன்றோரும் இந்த நான்கு அணிகள் பங்குபற்றிய ஒரு நாள் தொடரில் திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி, ராஜாஸ்தானை சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மட்டிற்கும் ஆசிய கிண்ணத் தொடரில் வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. இதன் மூலம் 20 வயதேயான கலீல் அஹ்மட் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக ஆடும் சந்தர்ப்பத்தினை பெறவிருக்கின்றார்.

கலீல் அஹ்மட்டோடு சேர்த்து உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிக்காட்டிய துடுப்பாட்ட வீரரான மயான்க் அகார்வாலினையும் இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணப் போட்டிகள் மூலம் சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றாது போயிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் இந்திய அணிக்காக ஆசியக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றார். இதேவேளை, இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான புவ்னேஷ் குமாருக்கும் ஆசிய கிண்ணத்திற்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

இலங்கை, இந்தியா உட்பட ஆசியாவின் ஆறு பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கிண்ணத்திற்கான இந்திய அணி – ரோஹித் சர்மா (அணித்தலைவர்), சிக்கர் தவான் (உப அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மஹேந்திர சிங் டோனி (விக்கெட் காப்பாளர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷார் பட்டேல், புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, சர்துல் தாகுர், கலீல் அஹ்மட்