உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் மன்னராக மகுடம் சூடிய இந்தியா

532

டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது முறையாகவும் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணிக்கான ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று முன்தினம் (24) உத்தியோகபூர்வமாக கையளித்தது.

கேப்டவுனில் நிறைவுக்கு வந்த இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டியின் முடிவில் இந்த விருது விராட் கோஹ்லியிடம் கையளிக்கப்பட்டது. இதன்படி, இவ்விருதை தொடர்ச்சியாக 2 தடவைகள் பெற்றுக்கொண்ட முதலாவது இந்திய அணித் தலைவராகவும், உலகின் 10 ஆவது தலைவராகவும் விராட் கோஹ்லி வரலாற்றில் இடம்பிடித்தார்.

அது மாத்திரமன்றி, முன்னதாக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோஹ், ரிக்கி பொன்டிங், மைக்கல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித், அன்ட்ரூ ஸ்டோர்ஸ் (இங்கிலாந்து), கிரேம் ஸ்மித் மற்றும் ஹஷீம் அம்லா (தென்னாபிரிக்கா), மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்) இவ்விருதினை பெற்றுக்கொண்டிருந்ததுடன், தற்போது அந்தப்பட்டியலில் தொடர்ந்து 2ஆவது தடவையாகவும் கோஹ்லி தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.

முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு

இதேநேரம், இந்த மகுடத்தை ஐ.சி.சி சார்பில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் கிரேஹம் பொல்லக் ஆகியோர் வழங்கி வைத்தனர். அதேநேரம், டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்துடன் இந்திய அணிக்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாகவும் வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் ஜொஹானெஸ்பேர்க்கில் நடைபெற்ற 3ஆவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதையடுத்து ஐ.சி.சியின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. எனவே, இதன் இறுதித் திகதியான எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை முந்துவதற்கான வாய்ப்பு வேறெந்த அணிகளுக்கும் இல்லை என்ற காரணத்தால் ஐ.சி.சி முன்கூட்டியே இந்த மகுடத்தை இந்திய அணிக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கருத்து வெளியிடுகையில், டெஸ்ட் தரவரிசையில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் முதலிடத்துக்கு முன்னேறி ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. முதலிடத்தில் நீடிப்பதும், பின்தள்ளப்படுவதும் எமது கையில் இல்லை. மற்ற அணிகளின் செயற்பாடுகளைக் கொண்டு மாற்றம் வரலாம். தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த வடிவமைப்பில் எங்கள் அணி பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு கிடைத்த நற்சான்றிதழ் இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதம் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இதுதான் தரவரிசையில் முதலிடத்துக்குச் செல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தது.

எனவே இந்த காலகட்டத்தில் நமது அணியின் வெற்றிக்கு பங்காற்றிய அனைத்து வீரர்களுக்கும் மற்றும் எங்கள் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த பயிற்சியாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அதேபோன்று உலகெங்கிலும் எங்களுக்கு ஆதரவளித்து வருகின்ற எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற இந்த விசேட விருதை, தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக இந்திய அணி பெற்றுக்கொண்டது. முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை இந்திய அணி கைப்பற்றியிருந்ததுடன், டோனி தலைமையில் 2009 முதல் 2011 வரையான காலப்பகுதியிலும் இந்திய அணி டெஸ்ட் மகுடத்தை தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008இல் டோனியின் தலைமையில் அடுத்தடுத்து வெற்றிகள் பெற்ற இந்திய அணி, 2009, டிசம்பர் மாதம் முதன் முறையாக, டெஸ்ட் அரங்கில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. எனினும், கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இந்திய அணி, முதலிடத்தை இழந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியை தோல்விகள் துரத்தின. குறித்த காலப்பகுதியில் அந்நிய மண்ணில் பங்கேற்ற 21 டெஸ்ட் போட்டிகளில்  5இல் வெற்றி, 8இல் தோல்வியடைந்த இந்தியா 8 போட்டிகளை சமநிலையில் முடித்தது. ஒருகட்டத்தில் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.  

இதன் பின்னணியில் டோனியும் 2014ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து தலைவர் பதவியை பொறுப்பேற்ற விராட் கோஹ்லி, தனது ஆக்ரோஷமான அணுகுமுறையால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். இதன் காரணமாக 2016இல் இலங்கை (2–1), தென்னாபிரிக்காவுக்கு (3-0) எதிராக வெற்றி வசப்பட்டது. இந்த நேரத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0–3 என, அவுஸ்திரேலியா இழக்க, முதலிடத்துக்கான போட்டி ஊசலாடியது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வி, கூட்டல், கழித்தல் கணக்குகளால் இந்தியா இரு முறை முதலிடத்தை அடைந்து பிறகு, மீண்டும் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை

அதனைத் தொடரந்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரை 3–0 என வென்றால் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக 2–0 என, இந்தியா வெல்ல, சற்றும் எதிர்பாராமால், இங்கிலாந்தை வென்ற பாகிஸ்தானுக்கு (111) முதலிடம் சென்றது.

எனினும், நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரை 3–0 என இந்தியா வெல்ல, 113 புள்ளிகள் பெற்று மறுபடியும் முதலிடத்தைப் பெற்று வெறுமனே 13 நாட்களில் பாகிஸ்தான் அணியிடம் இருந்த முதலிடத்தை இந்தியா தட்டிப்பறித்தது.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டைப் போன்று 2017இலும் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியது. இதில் கடந்த வருட முற்பகுதியில் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்ட இந்திய அணி, அதன் பிறகு நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை 2-1 எனவும், இலங்கையுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 1- 0 எனவும், இலங்கையில் நடைபெற்ற தொடரை 3-0 எனவும் கைப்பற்றி, 2017இல் தாம் பங்குபற்றிய அனைத்து தொடர்களையும் வெற்றிகொண்டு தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, விராட் கோஹ்லியின் தலைமையில் 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதயில் இந்திய அணி பங்கேற்ற 35 டெஸ்ட் போட்டிகளில் 21இல் வெற்றியும், 5இல் தோல்வியும், 9 போட்டிகளை சமநிலையிலும் முடித்துக் கொண்டது.

எனவே, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவாஸ்கர் யுகம், சச்சின் யுகம், டோனி யுகமெல்லாம் முடிந்து கிரிக்கெட்டில் இது கோஹ்லி யுகம் வீருநடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் கிரிக்கெட் உலகின் ஓட்ட இயந்திரம் என வர்ணிக்கப்படுகின்ற கோஹ்லி, அனைத்து வகையான போட்டிகளிலும் சாதனைக்கு மேல் சாதனைகளை நிகழ்த்தி கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி, 5554 ஓட்டங்களை 53.40 சராசரியுடன் பெற்றுக்கொண்டுள்ளார். 243 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டுள்ள அவர், 16 அரைச்சதங்களையும், 21 சதங்களையும் குவித்துள்ளார். இதில் 5 இரட்டைச்சதங்களும் அடங்கும். அத்துடன், தலைவராக 10 சதங்களைக் குவித்த முதல் வீரராகவும், அதிக சதங்களைக் குவித்த முதல் இந்தியராகவும் விராட் கோஹ்லி வலம் வருகிறார்.

இறுதியாக டெஸ்ட் முதல் டி20 போட்டிகள் வரை இந்திய அணியின் அனைத்து வெற்றிகளுக்கெல்லாம் முதுகெலும்பாக நிற்பது கோஹ்லிதான். இதனாலேயே அவரை கவாஸ்கர், டிராவிட், சச்சின் மற்றும் டோனிக்கு அடுத்தபடியாக ஒரு சிறந்த தலைவராக இதுவரை மனதில் வைத்துக் கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் சபை செயல்படுகிறது. ஆனால் பசி அடங்காத சிங்கம் போல அதிரடியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கும் கோஹ்லி, கிரிக்கெட் உலகில் தனிப்பட்ட சாதனைகளுடன் இந்திய அணிக்காக வேண்டி இன்னும் பல சாதனைகளை படைத்து உச்சத்தை தொடுவார் என்பதில் சந்தேகமில்லை.