கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக, அம்மாகாணத்தின் முதல் புற்தரை (Turf) கிரிக்கெட் அரங்கு ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டுக் கழக அங்கத்துவர்களின் நிதி உதவியோடு, இந்த மைதானம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சத்துருக்கொண்டானில், கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தினால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பானது பல்லின மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் இந்த மைதானத்தினை நிர்மாணம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் அணித்தலைவர் பந்துல வர்ணபுரவின் ஆளுகையில் இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டிருந்திருந்தன. இந்த மைதானம் முன்னரே கட்டி முடிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கொவிட்-19 வைரஸ் தொற்று அடங்கலாக நாட்டின் சில அசாதாரண சூழ்நிலைகள் அதனை பிற்போட்டிருந்தன.
தற்போது பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மைதானத்தில் 30 கிரிக்கெட் வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு, மைதானத்தின் நடுவே ஐந்து புற்தரை களங்கள் (Wickets) அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் வீரர்களின் பயிற்சிக்காக இங்கே ஆறு வலைப்பயிற்சி மையங்களும் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அதிநவீன இலத்திரனியல் ஸ்கோர் பலகை (Scoreboard), நகர்த்தக்கூடிய கறுப்பு வெள்ளை பார்வைத்திரை (Screen) என்பனவும் காணப்படுகின்றன.
அத்துடன் இந்த மைதானத்தில் இருக்கும் புற்களை தொடர்ச்சியாக பராமரிப்புச் செய்வதற்காக விஷேடமாக வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்களும், அதிநவீன நீர்க்கருவிகளும் காணப்படுகின்றன.
இந்த மைதானத்தின் எல்லை அளவுகள் சுமார் 80 மீட்டர் வரையில் இருப்பதுடன், இந்த மைதானம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பிரயாணிகளின் ஒரு ஈர்ப்பிடமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மைதானத்தின் உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்பு மட்டு மாவட்டத்தில் இருந்து ஒரு வீரராவது தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பதாக உள்ளது என கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர் ThePapare.com இடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த மைதானத்தின் ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண நாயகர்கள் மற்றும் மட்டக்களப்பு ஹீரோஸ் (Batti Heroes) பங்குபெறும் கண்காட்சி T20 போட்டி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
>>பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் கேன் ரிச்சட்சன்
இந்தக் கண்காட்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய, அர்ஜூன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, ரொமேஷ் களுவிதாரன மற்றும் சமிந்த வாஸ் போன்ற முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<