காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கேஎல் ராகுல் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 15ஆம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது.
இதனிடையே, காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத கே.எல் ராகுல், 3ஆவது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் 3ஆவது போட்டியில் இருந்தும் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
- இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ஜெக் லீச்
- டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகிய விராட் கோஹ்லி!
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், கேஎல் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 90 சதவீதம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். எனவே கேஎல் ராகுலுக்குப் பதிலாக இளம் தேவ்தத் படிக்கலுக்கு 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் 23 வயதான இடது கை துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், மூன்று சதங்களை பதிவு செய்துள்ளார். இதில் தமிழகத்துக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 151 ஓட்டங்களை அவர் எடுத்திருந்தார். அத்தோடு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்ஸில் 105, 65, 21 என ஓட்டங்களைக் குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துடனான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்
ரோஹித் சர்மா (தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதார், வொசிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், கேஎஸ். பரத், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<