60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 38ஆவது போட்டி நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினா முதலில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 24 ஓட்டங்களுக்குள் 4 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதற்குப் பின் இணைந்த யூசுப் பதான் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஜோடி 5ஆவது விக்கட்டுக்காக வீழ்த்தப்படாத 134 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இதில் யூசுப் பதான் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 63 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 49 பந்துகளில் 66 ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் அணி தரப்பில் பந்துவீச்சில் பிரவீன் குமார் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் படுதோல்வி
பின்னர் 155 என்ற இலக்கோடு குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணிக்கு தொடக்கத்திலேயே ஸ்மித்தும், மெக்கல்லமும் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கட்டுக்காக 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்பு டுவயின் ஸ்மித் 27 ஓட்டங்களோடும் ப்ரெண்டன் மெக்கலம் 29 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்தனர். தலைவர் சுரேஷ் ரெய்னா 14 ஓட்டங்களோடு களத்தை விட்டு வெளியேறினாலும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரைச்சதம் விளாசினார். 29 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதிக் கட்டத்தில் களம்புகுந்த எரொன் பின்ச் 10 பந்துகளில் 3 பவுண்டரிகள் மாற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 29 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசியில் குஜராத் அணி 18 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்று நயிட் ரைடர்ஸ் அணியை 5 விக்கட்டுகளால் தோற்கடித்தது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக குஜராத் லயன்ஸ் அணியின் பிரவீன் குமார் தெரிவு செய்யப்பட்டார். 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4வது தோல்வியைப் பெற்றுள்ளது. குஜராத் அணி 7 வெற்றியை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்