ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் களத்தடுப்பை தீர்மானம் செய்தார்.

அதன்படி கொல்கத்தா அணியின் உத்தப்பா, கம்பீர் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள். உத்தப்பா அதிரடியாக விளையாடி 17 பந்தில் 25 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கொலின் முன்றோ 10 ஓட்டங்களோடு வெளியேற,  கம்பீர் 16 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார்.

கொல்கத்தா அணி 7.3 ஓவரில் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தத்தளித்தது. 4ஆவது விக்கட்டுக்கு மணிஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. மணிஷ் பாண்டே 30 பந்துகளில் 48 ஓட்டங்களைக்  குவித்து ஆட்டம் இழந்தார்.

பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்

ஆனால் யூசுப்பதான் ஆட்டம் இழக்காமல் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 52 ஓட்டங்களைப் பெற்றார். இவர்களது ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 171 ஓட்டங்களைக்  குவித்தது.

பின்னர் 172 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வோர்னர் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். என்றாலும், தவான் 30 பந்துகளில்  51 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் அந்த அணியின் வெற்றிக்கு ஐந்து ஓவரில் 58 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கொல்கத்தாவின் சுழற்பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹைதராபாத் அணியினர் திணறினார்கள். 16ஆவது ஓவரின் முதல் பந்தில் ஹூடாவும், 4ஆவது பந்தில் வில்லியம்சும் ஆட்டம் இழந்தார்கள்.

கடைசி 3 ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 44 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை நரேன் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஹென்றிக்ஸ் ஆட்டம் இழந்தார். ஹைதராபாத் அணி அந்த ஓவரில் 8 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கட்டை இழந்தது.

கடைசி 2 ஓவரில் அந்த அணியால் 13 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப்ஸ் சுற்றை உறுதிசெய்தது.

ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 3 விக்கட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்