கொல்கத்தா அணியில் விளையாடவுள்ள ஆரோன் பின்ச்

Indian Premier League 2022

340

அவுஸ்திரேலிய அணியின் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ஆரோன் பின்ச், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என அணியிலிருந்து விலகியுள்ளார்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணையும் லசித் மாலிங்க

எனவே, அலெக்ஸ் ஹேல்ஸிற்கு பதிலாக கொல்கத்தா அணி ஆரோன் பின்ச்சை அணியில் இணைத்துள்ளதாக கொல்கத்தா அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆரோன் பின்ச் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 1.5 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் இம்முறை நடைபெற்ற பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இதன்போது, இவர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடியதுடன் 7 போட்டிகளுடன், உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருக்க முடியாது என நாடு திரும்பினார். எனினும், பிளே-ஓஃப் போட்டிகளுக்காக மீண்டும் அணியுடன் இணைந்தார். எனவே, அவரால் தொடர்ந்து உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருக்கமுடியாது என IPL தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆரோன் பின்ச் கடைசியாக பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்தாலும், குறித்த பருவகாலத்தில் 12 இன்னிங்ஸ்களில் 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற T20I உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணம் வென்றிருந்தாலும், 7 போட்டிகளில் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். எவ்வாறாயினும், பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ரேன்ஜர்ஸ் அணிக்காக விளையாடி 10 போட்களில் 38.6 என்ற சராசரியில் 386 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்த ஆண்டுக்கான IPL தொடர் இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், கொல்கத்தா அணி முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கத.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<