அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) T20 தொடர் ஏற்பாட்டாளர்கள் அமைப்பு மற்றும் ஷாருக்கான் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக் குழுமம் (KRG) ஆகிய இரண்டும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரமாண்டமான முறையிலான கிரிக்கெட் மைதானம் ஒன்றினை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் மொஸ்டாக் ஹுசைன்
அந்தவகையில் இந்த கிரிக்கெட் மைதானத்தை ஈர்வின் நகரத்தில் நிர்மாணிக்க பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த மைதானம் 10,000 வரையிலான பார்வையாளர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவிருக்கின்றது.
அதேநேரம், அமெரிக்க கிரிக்கெட் சபையுடன் (USA Cricket) மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு அமைய கலிபோர்னியா மைதானத்துடன் சேர்த்து உலகத்தரம் வாய்ந்த ஆறு கிரிக்கெட் மைதானங்கள் அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் அமைக்கப்பட மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடர் ஏற்பாட்டாளர்கள் அமைப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அமெரிக்காவின் முதன்மை T20 தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடர் 2023ஆம் ஆண்டில் முதல்தடவையாக நடைபெறவுள்ள நிலையிலேயே புதிய மைதானங்களின் நிர்மாணப்பணிகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை இந்த ஆறு மைதானங்களும் கலிபோர்னியா தவிர்த்து டல்லாஸ் (Dallas), சேன் பிரான்சிஸ்கோ (SanFransisco), பே(B)ய் ஏரியா (Bay Area), சியட்டல் (Seatle) மற்றும் நோர்த் கரோலினா (Norht Carolina) ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.
2024ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணமாக ஈர்வின் நகரத்தில் அமைக்கப்படவிருக்கும் மைதானத்தினை, உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் நோக்குடன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி. இன்) அங்கீகாரத்தினையும் பெறுவதற்கு முயற்சி செய்யவிருப்பதாக மேஜர் லீக் (MLC) T20 தொடர் ஏற்பாட்டாளர் குழுவின் அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
>> இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் மொஸ்டாக் ஹுசைன்
புதிதாக அமைக்கப்படவிருக்கும் மைதானமானது, மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் லொஸ் ஏன்ஜல்ஸ் (Los Angeles) நகரினை பிரதிநிதித்துவம் செய்யவுள்ள அணியின் சொந்த மைதானமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் 25-30 வரையிலான மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேஜர் லீக் (MLC) T20 தொடரில் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணியின் உரிமையாளர்களாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், 2028ஆம் ஆண்டுக்கான லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு உள்ளடக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்த மைதானத்தில் ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
>> மேஜர் லீக் T20 தொடர் மே மாதம் ஆரம்பம்
நைட்ரைடர்ஸ் விளம்பரச்சின்னத்தினை உலகளாவிய ரீதியில் T20 கிரிக்கெட்டிற்காக கொண்டு செல்வதும், அமெரிக்க மண்ணில் கிரிக்கெட் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்குமான அடிப்படையிலையே இந்த மைதானத்தில் தமது முதலீடு அமைந்திருப்பதாக குறிப்பிட்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான், புதிதாக அமைக்கப்படவிருக்கும் மைதானம் தொடர்பில் எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<