வெள்ளிக் கிண்ணத்திற்காக மோதவுள்ள கிருலப்பனை யுனைடட், ஹேனமுல்ல யுனைடட் அணிகள்

324
Silver cup final preview

கொழும்பு கால்பந்து லீக் ஏற்பாடு செய்து நடாத்தும் வெள்ளிக் கிண்ணத்திற்கான நொக் அவுட் கால்பந்து சுற்றின் இவ்வருடத்திற்கான இறுதிப் போட்டியில் கிருலப்பனை யுனைடட் மற்றும் ஹேனமுல்ல யுனைடட் ஆகிய கழக அணிகள்  நாளை கிண்ணத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி, கொழும்பு CR & FC மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெறும்.

இவ்வருடத்திற்கான இந்த வெள்ளிக் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த தொடரில் கொழும்பு கால்பந்து லீக்கில் டிவிஷன் 2 தரத்தில் உள்ள 20 அணிகள் கலந்துகொண்டன.

கிருலப்பனை யுனைடட்

கிருலப்பனை யுனைடட் அணி கடந்த ஒரு வருடமாக மிகவும் சிறந்த முறையில் விளையாடி வரும் ஒரு அணியாகும். குறிப்பாக கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ளிக் கிண்ண தொடரில் இவ்வணி இரண்டாம் இடத்தைப் பெற்ற அணியாகவும் உள்ளது.

அதேபோன்று, 2016ஆம் ஆண்டிற்கான FA கிண்ணத் தொடரிலும் மிகவும் சிறப்பாக விளையாடிய இவ்வணி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, கடைசியாக இறுதி 32 அணிகளுக்குள் தெரிவானது. இறுதி 32 அணிகளுக்குள்ளான போட்டியில் இலங்கையின் பிரபல சொலிட் அணியுடன் மோதி தோல்வியடைந்தது.

அதற்கு முன்னைய போட்டியில் அவ்வணி, இம்முறை வெள்ளிக் கிண்ண இறுதிப் போட்டியில் தம்முடன் மோதவுள்ள ஹேனமுல்ல யுனைடட் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது.

கவிந்து மதுஷானின் தலைமையின் கீழ் விளையாடும் கிருலப்பனை யுனைடட் அணி, மிகவும் பலமான பின்கள வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ள அணியாகும். இவ்வருட வெள்ளிக் கிண்ண தொடரில் இறுதி மூன்று போட்டிகளிலும் எதிரணிக்கு ஒரு கொல்களையேனும் அவர்கள் வழங்காமல் இருந்தமை இதற்கு சான்றாக இருக்கின்றது.

காலிறுதிக்கு முன்னைய போட்டி

கிருலப்பனை யுனைடட்  05 – 00 கொழும்பு சிடி கழகம்

காலிறுதிப் போட்டி

கிருலப்பனை யுனைடட் 01 – 00 நிவ் ஸ்டார் கழகம்   

அரையிறுதிப் போட்டி

கிருலப்பனை யுனைடட் அணி 03 – 00 ஓல்ட் ஜோஸ் கழகம்

தமது அணி குறித்து கிருலப்பனை யுனைடட் அணியின் பயிற்சியாளர் எல்.கே பிரியன்த கருத்து தெரிவிக்கையில், எமது அணியில் கிருலப்பனை மற்றும் அதற்கு வெளிப்பகுதி வீரர்களும் உள்ளனர். எமது வெற்றிக்கு வீரர்களின் தொடர் முயற்சியும், அர்ப்பணிப்புமே காரணம்.

எமது வீரர்கள் கிழமையில் 3 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். தற்பொழுது அவர்களின் நிலைமை மிகவும் சிறந்த முறையில் உள்ளது. கிண்ணத்தை பெற தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

கிருலப்பனை யுனைடட் அணி

Kirulapone United - Silver Cup Final (2016)


ஹேனமுல்ல யுனைடட்

தொட்டலங்க பகுதியை சேர்ந்த இவ்வணியினர் இம்முறை வெள்ளிக் கிண்ணத்தை கைப்பற்றும் முழு எதிர்பார்ப்புடன் இத்தொடரை ஆரம்பித்தனர். தற்பொழுது தமது கனவை நிறைவேற்றும் இறுதி தருனத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் வெள்ளிக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வருகின்றமை இது இரண்டாவது தடவையாகும்.

FA கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் இவ்வணி கிருலப்பனை யுனைடட் அணியிடம் மாத்திரமே தோல்வியுற்றது. ஏனைய அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியது.

இவர்களும் இத்தொடரின் முன்னைய சுற்றுகளில் கிருலப்பனை யுனைடட் அணியினரைப் போன்றே வெற்றியீட்டினர்.

காலிறுதிக்கு முன்னைய போட்டி

ஹேனமுல்ல யுனைடட்  05 – 00 செலன்ஜர்ஸ் கழகம் 

காலிறுதிப் போட்டி

ஹேனமுல்ல யுனைடட் 01 – 00 ரத்னம்  பி

அரையிறுதிப் போட்டி

ஹேனமுல்ல யுனைடட் அணி 03 – 00 கொலொன்ஸ் கழகம் 

இம்முறை இறுதிப் போட்டியில் கிருலப்பனை யுனைடட் அணியினரை வெற்றி கொண்டு கிண்ணத்தை தம்வசப்படுத்தும் முழு நம்பிக்கையுடனேயே ஹேனமுல்ல யுனைடட் அணியின் பயிற்சியாளர் ராசிக் மற்றும் அணித்தலைவர் ரிசான் ஆகியோர் உள்ளனர்.

ஹேனமுல்ல யுனைடட்  அணி

Henamulla United - Silver Cup Final (2016)

நாளை இடம்பெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 15,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.