கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான, எல்.இ. பிளாசே கிண்ணத்திற்கான வருடாந்த ரக்பி போட்டியில் இவ்வருடத்திற்கான மோதலில் விறுவிறுப்பான ஆட்டத்தின் பின்னர் 40-39 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ்வூட் கல்லூரி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
கிங்ஸ்வூட் மற்றும் லும்பினி கல்லூரிகள் B பிரிவில் முன்னிலையில்
தற்பொழுது நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகளில் B பிரிவில் அனைத்துப் போட்டியிலும் வெற்றிபெற்ற கிங்ஸ்வூட் கல்லூரி, A பிரிவில் திரித்துவக் கல்லூரியிடம் மாத்திரம் தோல்வியுற்ற வெஸ்லி கல்லூரியுடன் போகம்பர மைதானத்தில் பிளாசே கிண்ணத்திற்காக போட்டியிட்டது.
இது லீக் போட்டியொன்றாக அல்லாது நட்பு ரீதியான போட்டியாகவே நடாத்தப்பட்டது. கடந்த வருடம் வெஸ்லி அணி இக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி ஆரம்பித்து சில வினாடிகளில் வெஸ்லி அணிக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதுவரை சிறப்பாக உதைந்து வந்த அவிஷ்க லீ இவ்இலகுவான உதையை தவறவிட்டார். அதன் பிறகு கிங்ஸ்வூட் கல்லூரியும் போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
தமக்கு கிடைத்த பெனால்டி மூலம் வெல்ஸி அணியின் கோட்டைக்குள் புகுந்த கிங்ஸ்வூட் வீரர்கள் லைன் அவுட்டினை சிறப்பாக பயன்படுத்தி ராஜநாயக மூலமாக முதலாவது ட்ரை வைத்தனர். எஸ்.ரணவீர கொன்வர்சனை இலகுவாக உதைந்தார். (07-00)
கிங்ஸ்வூட் கல்லூரியின் ராஜநாயக அபாயமான முறையில் வெஸ்லி வீரரை தடுத்ததனால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு, மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் கம்பங்களின் நடுவே உதைந்த அவிஷ்க லீ, வெஸ்லி அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (07-3)
தொடர்ந்து தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி கம்பங்களின் நடுவே உதைய தீர்மானித்த கிங்ஸ்வூட் கல்லூரி, ரணவீர மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. (10-03)
20ஆவது நிமிடத்தில் மற்றுமொரு பெனால்டியை வெஸ்லி அணி பெற்றுக்கொண்டது. இம்முறை இலகுவான உதையை பெற்ற அவிஷ்கா லீ 3 புள்ளிகளை தமது அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (10-06)
அதற்கு இரண்டு நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஒரு முறை கிங்ஸ்வூட் கல்லூரி பெனால்டி வாய்ப்பினை பெற்றுக்கொண்டது. மீண்டும் ஓரு முறை தனது திறமையை நிரூபித்த ரணவீர சிறப்பாக உதைந்து தமது அணியின் முன்னிலையை அதிகரித்தார். (13-06)
கிங்ஸ்வூட் அணி முதல் பாதியை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. குறிப்பாக தமது சிறப்பான உதைகளின் மூலமாக எதிரணியின் எல்லைக்குள் பந்தை செலுத்திய கிங்ஸ்வூட் வீரர்கள், வெஸ்லி அணிக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்தனர்.
இலங்கை அணியை பயிற்றுவிக்கவுள்ள பிஜி நாட்டின் பெரேடி வெரெபுலா
எனினும் போட்டியை விட்டுக்கொடுக்காத வெஸ்லி அணி சிறப்பாகப் போராடி தமது முதல் ட்ரையை வைத்தது. கிங்ஸ்வூட் அணியின் 5 மீட்டர் எல்லையினுள் போராடி, டி.ஸாபர் மூலமாக வெஸ்லி அணி முதல் ட்ரை வைத்தது. எனினும் அவிஷ்க லீ கொன்வர்சனை தவறவிட்டார். (13-11)
முதல் பாதி நிறைவடைய சிறிது நேரம் எஞ்சி இருக்கையில் வெஸ்லி அணி தமது 22 மீட்டர் எல்லையினுள் தொடர்ந்து இரண்டு தவறுகளை மேற்கொண்டது. இதனால் பெனால்டி வாய்ப்பினை பெற்றுக்கொண்ட கிங்ஸ்வூட் கல்லூரி இரண்டு முறையும் பந்தை எடுத்து ஓட முனைந்தது. இரண்டாவது முயற்சியில் பலனை கண்ட அவர்கள் ரணவீர மூலமாக ட்ரை வைத்த போதும், அவர் கொன்வர்சனை தவறவிட்டார். (18-11)
முதல் பாதி : கிங்ஸ்வூட் கல்லூரி 18 – 11 வெஸ்லி கல்லூரி
இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே எதிரணி வீரர்களின் நடுவே ஊடறுத்து அவர்களை தாண்டி சென்ற ரணவீர, இறுதியில் பந்தை செனவிரத்னவிற்கு பரிமாற்றினார். 35 மீட்டர்கள் பந்தை தனியாக எடுத்து சென்ற செனவிரத்ன ட்ரை வைத்து அசத்தினார். இம்முறை ரணவீர கொன்வர்சனை தவறவிட்டார். (23-11)
46ஆவது நிமிடத்தில் கிங்ஸ்வூட் கல்லூரி வீரர் பந்தை தவறவிட்டதால், வெஸ்லி அணிக்கு நடுவரால் ஸ்க்ரம் வழங்கப்பட்டது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திகொண்ட அவர்கள் மீண்டும் ஒரு முறை ஸாபர் மூலமாக ட்ரை வைத்தனர். கடினமான கோணத்திலிருந்து கொன்வர்சனை சிறப்பாக உதைந்து, வெஸ்லி அணிக்கு மேலதிக 2 புள்ளிகளையும் அவிஷ்க லீ பெற்றுக்கொடுத்தார். (23-18)
ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் கிங்ஸ்வூட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. 25 மீட்டர் தொலைவிலிருந்து இலகுவான உதையை கம்பங்களின் நடுவே உதைந்த ரணவீர, அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (26-18)
வலைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு
தொடர்ந்து வெஸ்லி அணிக்கும் பெனால்டி வாய்ப்பு கிடைத்த பொழுதும், இலகுவான உதையை அவிஷ்க லீ தவறவிட்டார். கிங்ஸ்வூட் கல்லூரி வீரர் எஸ்.வீரசிங்க மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, அவ்வணி 14 வீரர்களுடன் களத்தில் விளையாடியது.
இதனை சாதகமாகப் பயன்படுத்திய அவிஷ்க லீ சிறப்பாக விளையாடி, ட்ரை கோட்டின் அருகே பந்தை அபொன்சுவிற்கு வழங்க, அபொன்சு ட்ரை கோட்டை இலகுவாகக் கடந்தார். இம்முறை மொகமட் சுபைர் கொன்வர்சனை தவறவிடாது உதைந்தார். (26-25)
வெஸ்லி அணி வீரர் ஹர்ஷேன், கிங்ஸ்வூட் வீரரை தாமதமாக தடுத்ததால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் 63ஆவது நிமிடத்தில், கிங்ஸ்வூட் அணித் தலைவர் ஹேஷான் ஜென்சன் சிறப்பாக செயற்பட்டு ட்ரை வைத்து அசத்தினார். கிட்டத்தட்ட 35 மீட்டர் தூரத்தினை தனியாக கடந்த ஜென்சனை, வெஸ்லி அணி வீரர்களால் தடுக்க முடியவில்லை. ரணவீர கொன்வர்சனை தவறவிடவில்லை. (33-25)
எனினும் போட்டியை விட்டுக்கொடுக்காத வெஸ்லி அணி, பதிலுக்கு தாமும் ஒரு ட்ரை வைத்து 1 புள்ளியால் பின்நிலை அடைந்தது. இம்முறை ஹர்ஷேன் வெஸ்லி அணி சார்பாக ட்ரை வைக்க, அவிஷ்க லீ இலகுவாக கொன்வர்சனை உதைந்தார். (33-32)
இரண்டு அணிகளுக்கும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசமாக இருந்த நிலையில், 75ஆவது நிமிடத்தில் கிங்ஸ்வூட் தலைவர் மீண்டும் ஒரு முறை தனது தனி திறமையால் ட்ரை வைத்து அசத்தினார். 25மீட்டர் தூரத்திலிருந்து பந்தை பெற்ற ஜென்சன், எதிரணி வீரர்களை தந்திரமாக கடந்து சென்று கம்பத்தின் கீழே ட்ரை வைத்தார். ரணவீர இலகுவான கொன்வர்சனை உதைத்து முக்கிய 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (40-32)
அதன் பிறகும் போட்டியை விட்டுக்கொடுக்காத வெஸ்லி அணி, ட்ரை வைப்பதற்கு கடுமையாக முயற்சித்தது. இறுதி ஒரு நிமிடம் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் 8 புள்ளிகளால் பின்னிலையில் காணப்பட்ட வெஸ்லி கல்லூரி, வெத்தசிங்க மூலமாக கம்பத்தின் கீழே ட்ரை வைத்து கிங்ஸ்வூட் அணிக்கு அழுத்தத்தை கொடுத்தது. விரைவாக கொன்வர்சனையும் உதைந்து 2 புள்ளிகளையும் பெற மீண்டும் ஒரு புள்ளி வித்தியாசமே ஏற்பட்டது. (40-39)
வரலாற்றில் முதல் முறையாக பொதுநலவாய கனிஷ்ட போட்டிகளில் இலங்கை ரக்பி அணி
தொடர்ந்து வேகமாக போட்டி ஆரம்பிக்கப்பட்டவுடன், பந்தை வெஸ்லி அணி மீண்டும் பெற்றுக்கொண்ட பொழுதும், அவ்வணியால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. நடுவரால் இறுதி நேர விசில் ஊதப்பட, கிங்ஸ்வூட் கல்லூரி 1 புள்ளியினால் வெற்றிபெற்று கிண்ணத்தை ஒரு வருடத்தின் பின்னர் மலையகத்திற்கு சொந்தமாக்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்தது. B பிரிவில் போட்டியிடும் கிங்ஸ்வூட் கல்லூரி தமது திறமையை பிரபல வெஸ்லி அணியை வென்று நிரூபித்தது. வெஸ்லி அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொழுதும், சிறு தவறுகளால் போட்டியை பறிபொடுத்தது.
முழு நேரம் : கிங்ஸ்வூட் கல்லூரி 40 – 39 வெஸ்லி கல்லூரி
Thepapare.com இந்த போட்டியின் சிறந்த வீரர் – ஹேஷான் ஜென்சன் (கிங்ஸ்வூட் கல்லூரி)
புள்ளிகள் பெற்றோர்
கிங்ஸ்வூட் கல்லூரி – ராஜநாயக – 1T, ஹேஷான் ஜென்சன் – 2T, ரணவீர – 1T 3C 3P, செனவிரத்ன – 1T
வெஸ்லி கல்லூரி – டி.ஸாபர் – 2T, அவிஷ்க லீ – 2P 2C, அபொன்சு – 1T, மொகமட் சுபைர் – 1C, ஹர்ஷேன் – 1T, வெத்தசிங்க – 1T