Gujarat-Lions-Aaron-Finch-plays-a-shot
© AFP

9ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 3ஆவது போட்டி நேற்று மொஹாலியில் அமைந்துள்ள பிண்டரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டேவிட் மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை எதிர் கொண்டது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினா முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக முரளி விஜே 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக் 34 பந்துகளில் 42 ஓட்டங்களையும், மனன் வோஹ்ரா 23 பந்துகளில் 38 ஓட்டங்களையும், மார்க்ஸ் ஸ்டொயினிஸ் 22 பந்துகளில் 33 ஓட்டங்களையும், விரிதிமன் ஷா 25 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் லயன்ஸ் அணியின் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய டுவயின் பிராவோ 4 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்த ரவீந்திர ஜடேஜா 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு 162 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கான 162 ஓட்டங்களை எட்டியது.குஜராத் லயன்ஸ் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எரொன் பின்ஞ் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 12 பவுண்டரிகள் அடங்கலாக 47 பந்துகளில் 74 ஓட்டங்களையும், தலைவர் சுரேஷ் ரயினா 20 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் சந்தீப் சர்மா, மிச்சல் ஜொன்சன், பர்தீப் சஹு மற்றும் மார்க்ஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர். நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களைப் பெற்ற எரொன் பின்ஞ் தெரிவு செய்யப்பட்டார்.