கடந்த கால அதிரடிகளை மீண்டும் ஞாபகப்படுத்திய பொல்லார்ட்

253
IPLT20.COM

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (10) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அணித்தலைவர் கீரன் பொல்லார்ட்டின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றியினை பெற்றுள்ளது.

IPL இறுதிப் போட்டியை நடத்துவதற்கான தகுதியை இழக்குமா சென்னை?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் …..

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா பயிற்சியின் போது உபாதைக்குள்ளாகிய காரணத்தினால், கீரன் பொல்லார்ட் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 11 வருடங்களில் இடம்பெற்ற 133 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிய ரோஹித் சர்மா, முதல் முறை நேற்றைய ஆட்டத்தில் ஆடவில்லை. இறுதியாக அவர் 2008ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தனது அப்போதைய அணியான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடாமல் இருந்தார்.  

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கிரிஸ் கெயில் மற்றும் லோகேஸ் ராஹுலின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 198 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

ராஹுல் தனது முதலாவது ஐ.பி.எல். சதத்தினை பெற்றதுடன் (100*), இந்த பருவாகலத்தின் நான்காவது சதமாகவும் இந்த சதம் பதிவானது. இம்முறை ஏற்கனவே டேவிட் வோர்னர், ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் சஞ்சு செம்சன் ஆகியோர் சதங்களை குவித்திருந்தனர். ராஹுலுக்கு அடுத்தப்படியாக கிரிஸ் கெயில் 36 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர் பாரிய வெற்றியிலக்கினை நோக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பம் முதல் தடுமாறியது. முதல் 10 ஓவர்களில் 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில், வெற்றியிலக்குக்கு அடுத்த 10 ஓவர்களில் 133 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெறும் 3 ஓட்டங்களுடன் களத்தில் நின்ற கீரன் பொல்லார்ட் தனியாளாக போட்டியின் திசையை மாற்றத் தொடங்கினார்.

அஸ்வினின் ஓவரில் இருந்து தனது அதிரடியை தொடங்கிய இவர், 22 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். தொடர்ந்தும் அதிரடியாக ஆடி, பொல்லார்ட் ஓட்டங்களை குவிக்க இறுதி ஓவருக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராஜ்பூட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்து நோ போலாக வீசப்பட்டதுடன், அதனை பொல்லார்ட் சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் பௌண்டரியை விளாச, 4 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டன. எனினும், துரதிஷ்டவசமாக மூன்றாவது பந்தில் டேவிட் மில்லரிடம் பிடிகொடுத்து பொல்லார்ட் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 31 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்களை குவித்திருந்தார். இறுதியாக 3 பந்துகளில் நான்கு ஓட்டங்கள் என்ற நிலை மாறி, ஒரு பந்துக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எனினும், சிறப்பாக பந்தை எதிர்கொண்ட அல்ஷாரி ஜோஷப் 2 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 197/3 (20), லோகேஸ் ராஹுல் 100 (64), கிரிஸ் கெயில் 67 (36), ஹர்திக் பாண்டியா 57/2

மும்பை இந்தியன்ஸ் – 198/7 (20), கீரன் பொல்லார்ட் 83 (31), குயிண்டன் டி கொக் 24 (23), மொஹமட் சமி 21/3

முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<