இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் நடுவரின் தீர்ப்பை ஏற்க மறுத்த காரணத்திற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கீரன் பொல்லார்டிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஒரு தரக்குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் எச்சரிக்கைக்குள்ளான இந்திய வீரர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது T20I ……
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி T20I, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகின்றது. இதில், முதலாவதாக நடைபெற்று வரும் T20I தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவுபெற்றுள்ளதுடன், தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரில், நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் நடுவரின் தீர்ப்பை ஏற்க மறுத்த குற்றச்சாட்டுக்காக, கீரன் பொல்லார்டிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஒரு தரக்குறைப்பு புள்ளி வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது T20I போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த கீரன் பொல்லார்ட், மேலதிக வீரர் ஒருவரை களத்தடுப்பில் ஈடுபடுவதற்காக மைதானத்துக்கு வருமாறு அழைத்தார். குறித்த விடயத்தை நடுவர்களுக்கும் அறிவித்திருந்தார். ஆனால், வீசப்பட்டுக்கொண்டிருந்த ஓவருக்கு பின்னரே, மேலதிக வீரர் களத்துக்கு வரவேண்டும் என நடுவர்கள் பொல்லார்டிடம் குறிப்பிட்டனர்.
எனினும், நடுவர்களின் தீர்ப்பை பொல்லார்ட் ஏற்க மறுத்திருந்தார். இதன் காரணமாக ஐசிசியின் நடத்தை விதிமுறை 2.4 படி களத்தில் உள்ள சக வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுதல் மற்றும் நடுவரின் தீர்ப்புக்கு கீழ்படியாமை என்ற குற்றங்களுக்காக பொல்லார்டிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித்தின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கான ….
போட்டி மத்தியஸ்தர் ஜெப் க்ரொவ் போட்டியின் பின்னர், மேற்கொண்ட விசாரணையின் படி, பொல்லார்டின் குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் இந்திய அணி டக்வர்த் லிவிஸ் முறைப்படி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததுடன், இந்தப் போட்டியில் கீரன் பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பொல்லார்ட் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர், முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியதுடன், இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறத் தவறியிருந்த நிலையில், பொல்லார்ட் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<