அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர டெஸ்ட் துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜா இந்திய வீசா பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதோடு அங்கே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.
இந்த சுற்றுப் பயணத்தில் முதல்கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறவுள்ள நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜாவிற்கு இந்தியா பயணிக்க வீசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்கள் குழாத்துடன் இணைந்து இந்தியாவிற்கு பயணிக்க முடியாமல் போனது.
எனினும் வீசா பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு கவாஜாவிற்கு இந்திய வீசா வழங்கப்பட்டுள்ள நிலையில் உஸ்மான் கவாஜா இன்று (02) இந்தியா பயணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையில் அரசியல் பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவி வருவதன் காரணமாகவே பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட உஸ்மான் கவாஜாவிற்கு இந்தியா வீசாவினைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றது என நம்பப்படுகின்றது.
உஸ்மான் கவாஜா இதற்கு முன்னர் 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட போதும் அந்த சந்தர்ப்பங்களிலும் வீசா பிரச்சினைகளை எதிர் கொண்டதாக கூறப்பட்டிருக்கின்றது.
அத்துடன் 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் T20 தொடரில் நியூ சவூத் வேல்ஸ் அணியினைப் பிரதிநிதித்துவம் செய்து விளையாடுவதற்கும் உஸ்மான் கவாஜாவிற்கு இந்திய வீசா வழங்க முதலில் மறுக்கப்பட்டு இந்த பிரச்சினை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் பின்னர் சரி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> விரைவில் நடைபெறவுள்ள மகளிர் IPL தொடர் ஏலம்
அதேநேரம் தற்போது வீசா சிக்கல்கள் நிறைவடைந்து இந்தியாவிற்கு பயணமாகும் உஸ்மான் கவாஜா பெங்களூரில் இருக்கும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை உஸ்மான் கவாஜா வீசா பிரச்சினைகள் நிறைவடைந்து இந்தியா பயணமாகும் விமானத்தில் தான் ஏறிய பின்னர் இருக்கும் புகைப்படம் ஒன்றினையும் இன்ஸ்டாக்கிரம் கணக்கு வாயிலாக வெளியிட்டிருக்கின்றார். அத்துடன் தனக்கு இந்திய வீசா கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினைப் மையப்படுத்தியும் ஒரு பதிவினை பிரசுரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
View this post on Instagram
அதேவேளை இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 09ஆம் திகதி நாக்பூர் நகரில் ஆரம்பமாகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<