அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா, தனது தலைக்கவசத்தில் பெளன்சர் பந்து பலமாகத் தாக்கிய போதும் சேதங்கள் ஏதுமின்றி தப்பியிருக்கின்றார்.
அடுத்தவாரம் இங்கிலாந்தில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தயார்படுத்தல்களில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு தயாராகும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுடன் உத்தியோகபூர்வமற்ற பயிற்சிப் போட்டி ஒன்றில் நேற்று (22) ஆடியிருந்தது.
உலகக் கிண்ண விஷேட தூதுவராக மஹேல ஜயவர்தன
உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் ………
இங்கிலாந்தின் செளத்தம்ப்டன் நகரில் நடந்த இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடி, அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 230 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.
இந்த வெற்றி இலக்கினை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக உஸ்மான் கவாஜா களம் வந்திருந்தார்.
அவர் களம் வந்து 5 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் இரண்டாவது ஓவரினை வீசிய அன்ட்ரூ ரசல் வீசிய வேகமான பெளன்சர் பந்து ஒன்று கவாஜாவின் தலைக்கவசத்தினை தாக்கியது. இந்த பெளன்சர் பந்து தாக்குதலை அடுத்து போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெற்ற கவாஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் வைத்து உஸ்மான் கவாஜா பல பரிசோதனைகளை எதிர்கொண்ட நிலையில், அவர் உபாதை ஆபத்துக்கள் எதிலும் சிக்கவில்லை என்பது உறுதியாகியது.
இதேநேரம், கவாஜா இல்லாத நிலையில் போட்டியில் தொடர்ந்து துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, குறித்த பயிற்சிப் போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியினை பதிவு செய்தது.
இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அரைச்சதம் ஒன்றுடன் உதவிய சோன் மார்ஷ் கவாஜாவினை பெளன்சர் பந்து தாக்கியது தொடர்பில் பேசும் போது அது மிகவும் பயம்தரும் விடயமாக அமைந்திருந்தது எனக் கூறியிருந்தார்.
மார்ஷ் மேலும் குறிப்பிடுகையில், “பந்து கவாஜாவின் கண்ண எழும்பில் தாக்கியது. ஆனால், முக்கியமான விடயம் என்னவெனில் அவர் நல்ல நிலைமையில் இருக்கின்றார். அவர் தனது பழைய நிலைக்கும் விரைவில் திரும்புவார். தலையில் உங்களுக்கு அடிபடும் போது நீங்கள் எப்படி அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்களோ அதேமாதிரியான அதிர்ச்சிக்கு அவரும் (கவாஜாவும்) உள்ளானார். உஸி (உஸ்மான் கவாஜா), இப்போது (போட்டிகளில் விளையாட) தயராகவிருக்கின்றார்.” எனக் குறிப்பிட்டார்.
உஸ்மான் கவாஜா பெளன்சர் பந்து ஆபத்திலிருந்து தப்பியிருப்பதால் அவுஸ்திரேலிய அணி பங்கெடுக்கவுள்ள இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் சனிக்கிழமையும் (25), இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் திங்கட்கிழமையும் (27) மோதுவிருக்கின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<