சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த KP என்று வரணிக்கப்படும் கெவின் பீட்டர்சன், 2013-14 அவுஸ்ரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஏஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு கட்டாய ஓய்வின் மூலம் இங்கிலாந்து அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
இவ்வாறு கழற்றி விடப்பட்டாலும் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு ஆடுவதற்காக கெவின் பீட்டர்சன் முயன்றார். ஆனால் அவருக்கு இனி அணியில் விளையாட இடமில்லை என இங்கிலாந்து கிரிக்கட் சபை தெளிவாகத் தெரிவித்து விட்டது.
இதன் பின் தற்போது இரண்டரை வருடம் கழிந்துள்ள நிலையில் கெவின் பீட்டர்சன் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தீர்மானித்துள்ளார்.
இதன்படி தென் ஆபிரிக்காவின் பீட்டர் மாரிட்ஸ் பர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட கெவின் பீட்டர்சன் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆபிரிக்காவிற்காக விளையாட எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் சபை (ஐ.சி.சி) விதிகளின் படி, ஒருவீரர் ஒரு நாட்டிற்காக களமிறங்கி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே வேறு ஒரு அணியை பிரதி நிதித்துவம் செய்ய முடியும்.அதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் கெவின் பீட்டர்சன் சர்வதேசப் போட்டியொன்றில் ஐந்தாவது ஏஷஸ் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டார். இதுவே இவர் கலந்து கொண்ட கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
இந்த வருடம் 36 வயதை எட்டும் கடந்த கால டி20 போட்டிகளில் பிரகாசித்து வரும் கெவின் பீட்டர்சன் தென் ஆபிரிக்கா அணிக்கு 2018 ஆம் ஆண்டு விளையாடத் தகுதி பெறுவார்.எனினும், அவர் இன்னும் இங்கிலாந்து தேசத்துக்காக விளையாட இங்கிலாந்து கிரிக்கட் சபையின் அழைப்பிற்காகக் காத்திருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கட் சபையின் நிர்வாகஸ்தரான இங்கிலாந்து அணியின் முன்னால் தலைவர் என்று ஸ்ட்ரோஸ் அதை அனுமதிக்க மறுத்துள்ளார்.இதனால் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு விளையாடுவது சாத்தியமற்ற ஒரு விடயமாகக் காணப்படுகிறது.