நிந்தவுர் கெண்ட் விளையாட்டுக் கழகம் அம்பாரை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நடத்திவரும் கெண்ட் கிக் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் நிந்தவுர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணி 7- 0 என்ற கோல்கள் அடிப்படையில் மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழக அணியைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
மூன்றாவது கால் இறுதிப் போட்டி இன்று மாலை 4.15 மணிக்கு ஆரம்பமானது. மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணியும், மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழக அணியும் இதில் மோதிக் கொணடன.
போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணி வீரா் கொடுத்த பந்து பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட றிஸ்னி பின்கள வீரா்கள் இருவரைத்தாண்டி கோல் கம்பத்திற்குள் மிக வேகமாக அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.
கெண்ட் கிக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக நுழைந்த கோல்ட் மைன்ட்
மீண்டும் எவரெடி அணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் ஒலிம்பிக் அணிக்கு பிறிகிக் கிடைத்தது. முன்கள வீரர் எம்.எம்.ஏ.ஜாவீத் பந்தை அடித்த போது பந்து கோல் காப்பாளரின் கைக்கு நேரடியாகச் சென்றது. பந்தை மிக இலகுவாகப் பிடித்த கோல் காப்பாளர் சடுதியாக பந்தை நழுவவிட்டதனால் கோலானது.
இதனால் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1 -0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது.
போட்டியின் முழுக்கட்டுப்பாட்டையும் தமக்குள் எடுத்த ஒலிம்பிக் கழக வீரா்கள் மிக ஆக்ரோஷமாக எவரெடி அணியின் கோல் கம்பத்தை நோக்கி ஊடுருவினர். இந்த சந்தர்ப்பத்தில் 18ஆவது நிமடத்தில் முன்கள வீரா் கொடுத்த பந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர வீரா் சப்னி அகமட் மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது கோல் கம்பத்திற்குள் பந்து சென்றது. இதன் மூலம் இரண்டாவது கோலையும் ஒலிம்பிக் கழகம் பெற்றது.
எவரெடி வீரர்கள் பந்து பரிமாற்றத்தை முன் நகர்த்திச் சென்ற போது கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து கோல் போடும் அரிய வாய்ப்பை எவரெடி வீரர் முனைஸ் கானினால் தவறவிடப்பட்டது . அவர் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.
முதல் பாதி முடியும் வேளையில் 45ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் வீரர் சப்னி அகமட் கோல் கம்பத்திற்கு இடது பக்கத்திலிருந்து தனது இடது காலால் அடித்து கோலாக்கினார். இதன் மூலம் 3 – 0 என்ற அடிப்படையில் ஒலிம்பிக் கழக அணி முன்னனியில் திகழ்ந்தது.
முதல் பாதி : ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 3 – 0 எவரெடி விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் கழக வீரர் எம்.எம்.ஏ.ஜரீத் தலையால் முட்டி கோல் போட்டார்.
போட்டியின் 65ஆவது நிமிடத்திலும் எம் எம்.ஏ.ஜாவீத் வலது பக்கத்திலிருந்து மிக வேகமாக அடித்த பந்து கோல் காப்பாளரின் கையில் பட்டு கம்பத்திற்குள் சென்று கோலாக, 5ஆவது கோலையும் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் பதிவு செய்தது.
ஒரு கோலையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எவரெடி கழக அணி வீரர்கள் ஒலிம்பிக் அணியின் கோல் எல்லையை நெருங்கிய போதும் அவர்களது முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
ஆட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் ஒலிம்பிக் வீரர்ககளிடம் காணப்பட்ட போது 70ஆவது நிமிடத்தில் எம் எம்.ஏ.ஜாவீத் எவரெடி கழகத்தின் பின்கள வீரர்கள் இருவரையும் தாண்டி சிறப்பான முறையில் கோல் அடித்தார். ஜாவீத் தனது பங்கில் மூன்றாவது கோல் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
போட்டியின் 85ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் கழக வீரர் அறபாத் 7ஆவது கோலை அடித்தத போது ஒலிம்பிக் கழக அணி ரசிகர்களின் கரகோசம் மைதானத்தை கலகலப்பாக்கியது.
போட்டியின் முழுமையான நேரம் முடிந்த போது ஒலிம்பிக் கழகம் 7 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
முழு நேரம் : ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 7 – 0 எவரெடி விளையாட்டுக் கழகம்
இப்போட்டியில் வெற்றி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக் கழக பயிற்றுவிப்பாளர் யூ.எஸ். சமீம் கருத்துத் தெரிவிக்கும்போது, ”எமது அணி வீரா்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள். வீரர்களின் சரியான புரிந்துணர்வுடன் கூடிய பந்து பரிமாற்றம்தான் கூடுதலான கோல்களைப் பெற காரணமாய் அமைந்தது. நிச்சயம் அரையிறுதிப் போட்டியிலும் நம்பிக்கையுடன் களமிறங்குவோம்” என்றார்.
கெண்ட் கிக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு நுழைந்த சனி மௌன்ட்
தோல்வியடைந்த எவரெடி விளையாட்டுக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.அஸீம் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இந்தப் போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்படுவோம் என்று நம்பியிருந்தோம். இன்று எமது பிரதான கோல் காப்பாளர் விளையாடாமல் போனதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். பல சந்தர்ப்பங்களில் கோல் போடும் வாய்ப்பை எமது அணி வீரர்கள் தவற விட்டுள்ளனர். இப்போட்டியில் விட்ட தவறுகளை அடுத்து வரும் போட்டிகளில் திருத்திக் கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக ஏ.எம்.ஜப்ரான் கடமையாற்றியதுடன் துணை நடுவர்களாக எம்.வை.எல். அறபாத் மற்றும் எஸ்.எம். உபைதீன் செயற்பட்டதுடன் நான்காவது நடுவராக எம். றஸீட் செயற்பட்டார்.
கோல் பெற்றவர்கள்
ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் – எம்.எம்.ஏ.ஜாவீத் 12’, 65’, 70’, சப்னி அகமட் 18’, 45’, எம்.எம்.ஏ.ஜரீத் 61’, இஸட்.எம். அறபாத் 85’
மஞ்சள் அட்டை
ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் – எம்.எம்.ஏ. ஜரீத் 65’